மழைநீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்


மழைநீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறோம் -அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
x
தினத்தந்தி 24 Sep 2019 11:39 AM GMT (Updated: 24 Sep 2019 11:39 AM GMT)

வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னை,

கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளான மாண்டியா, தும்கூர், ஷிம்சா நதி ஆகியவற்றில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், ஏற்கனவே நிரம்பியுள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, வரும் நீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நிலையில், மேட்டூருக்கு நீர்வரத்து படிப்படியாக உயர்ந்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 22 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இது மாலையில் 30 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து, இரவுக்குள் 50 ஆயிரம் கனஅடியாக உயரும் என்று மத்திய ஜலசக்தி அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மேட்டூர் அணையும்  அதன் முழுக் கொள்ளளவை எட்டி விட்டதால், அணைக்கு வரும் நீர் முழுவதும் திறந்து விடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

காவிரி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும் என்பதால், கரையோரப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 50 ஆயிரம் கன அடியை எட்டும் என்பதால், இரவு முழுவதும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.  ஆற்றின் ஓரங்களில் நின்று செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். நீரின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் ஆற்றில் யாரும் இறங்க வேண்டாம். காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வடகிழக்கு பருவமழை காலத்தில் மழைநீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story