தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி


தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு சுகாதாரத்துறை அமைச்சர் பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2019 11:45 PM GMT (Updated: 22 Oct 2019 9:47 PM GMT)

தமிழகத்தில் 3,900 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நேற்று காய்ச்சல் சிறப்பு வார்டில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெற்றோர்கள் விழிப்புணர்வோடு டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே முழுமையாக காய்ச்சல் பாதிப்பை தடுக்க முடியும். காய்ச்சல் பாதிப்பு என்றால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று டாக்டரின் முழுமையான ஆலோசனைக்குப் பின்னரே சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

அதே போல் காய்ச்சல் பாதிப்புள்ள குழந்தைகளுக்கு டாக்டர்கள் கூறும் ஆலோசனையை முழுமையாக பின்பற்ற வேண்டும். டெங்கு காய்ச்சல் குணப்படுத்த கூடிய நோய் தான். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றால் ரத்த மாதிரியை கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும்.

மழைக்காலம் எங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்த மழைக்காலத்தில் டெங்கு காய்ச்சல் மேலும் பரவாமல் தடுப்பதற்கும், பொதுமக்களுக்கும் தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 900 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனையில் கூட டெங்கு போன்ற காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து நாங்கள் அறிவுறுத்தல் செய்து வருகிறோம். அரசு மற்றும் தனியார் டாக்டர்கள் டெங்கு காய்ச்சலுக்கு அரசு கொடுத்துள்ள விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். டெங்கு காய்ச்சல் குறித்த வதந்திகளை பரப்புவோர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மருத்துவக்கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் குழந்தைவேலு, அரசு குழந்தைகள் நல மருத்துவமனை பதிவாளர் டாக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Next Story