விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் மொத்தம் 115 வழக்குகள் பதிவு


விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் மொத்தம் 115 வழக்குகள் பதிவு
x
தினத்தந்தி 28 Oct 2019 12:16 PM GMT (Updated: 28 Oct 2019 12:16 PM GMT)

விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக சென்னையில் மொத்தம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதற்கு காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. ஆனால் அரசு அனுமதித்த நேரத்தை தாண்டி பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதுதொடர்பாக சென்னை வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 26 வழக்குகளும், புளியந்தோப்பு காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 30 வழக்குகளும் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதுதவிர, அடையாறு பகுதியில் 7 வழக்குகளும், பரங்கிமலையில் 2 வழக்குகளும், பூக்கடை பகுதியில் 5 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று சென்னையில் மொத்தம் 115 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 

இவர்களின் மீது தன்மையைப் பொறுத்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் 6 மாத சிறைத் தண்டனையும் அல்லது 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அப்போது, விதிகளை மீறியதாக சுமார் 700 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் சிறுவர்களும் அடக்கம். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 135 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

Next Story