அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்


அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்
x
தினத்தந்தி 24 Nov 2019 6:20 AM GMT (Updated: 24 Nov 2019 6:20 AM GMT)

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016-ம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டு இருக்க வேண்டும். ஆனால் பல்வேறு வழக்குகள் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவது கேள்வி குறியாக மாறி போனது. இந்தநிலையில், டிசம்பர் 2-ந்தேதி உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகிறது. பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகள் தொண்டர்களிடம் இருந்து ஏற்கனவே விருப்ப மனுக்களை பெற்று முடித்துள்ளது. இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுக்குழு- செயற்குழு கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில்  தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்த கூட்டத்திற்கு, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமை தாங்குகிறார். அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 3,400 பேர் பங்கேற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில்,  நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் உள்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:-

* விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றிக்கு ஈ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ்சுக்கு பாராட்டு. 

* இலங்கையில் உள்ள தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை.

* மருத்துவ பட்ட மேற்படிப்பில் OBC பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

* மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

* சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்.

* அதிமுக அரசின் சாதனைகளை மறைக்க முயலும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்.

* இருமொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் கல்விமுறையில் அதிமுக அரசு பயணிக்கும் என்பதில் உறுதி.

* உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வெற்றிக்கு அனைவரும் உழைத்திட வேண்டும் என தீர்மானம்.

Next Story