ஊரக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் - அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது


ஊரக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு ஓட்டு எந்திரங்கள் - அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது
x
தினத்தந்தி 28 Nov 2019 9:30 PM GMT (Updated: 28 Nov 2019 9:29 PM GMT)

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, மின்னணு ஓட்டு எந்திரங்களை பயன்படுத்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழக கவர்னர் வெளியிட்டுள்ள அவசரச் சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், அவசரம் கருதி, தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்காக அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. இது, தமிழ்நாடு ஊராட்சிகள் அவசர சட்டம் 2019 என்று அழைக்கப்படும். உடனடியாக இது நடைமுறைக்கு வருகிறது.

ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் மின்னணு ஓட்டு எந்திரங்களை தேவைக்கு ஏற்ப பயன்படுத்த வகை செய்யும் அளவில் சட்டதிருத்தம் செய்யப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது.

மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் சட்டத்தில் உள்ளது போல சட்ட திருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்றும் கிராம பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தலில் மின்னணு வாக்கு எந்திரங்களை பயன்படுத்த வகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று அதை செயல்படுத்தும் வகையில், அவசர சட்டம் பிறப்பிக்கப்படுகிறது. எனவே இந்த இடங்களில் வாக்குப் பெட்டிகள், வாக்குச்சீட்டுகளை பயன்படுத்துவதற்கு பதிலாக, மின்னணு ஓட்டு எந்திரங்களை பயன்படுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுபற்றி மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமியிடம் கேட்டபோது, ‘நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த அவசர சட்டத்தின்படி, ஒரு சில இடங்களில் மட்டும் சோதனை முறையில் மின்னணு ஓட்டு எந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டார்.

தமிழக கவர்னர் வெளியிட்டுள்ள மற்றொரு அவசர சட்டத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் 3-ம் நிலை நகராட்சிகளாக 49 இடங்கள் இருந்தன. பின்னர் நடந்த விரிவாக்கத்தில் அவற்றின் நிலையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.

இறுதியில் ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் 3-ம் நிலை நகராட்சி நிலையில் இருந்து 2-ம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. எனவே தமிழகத்தில் தற்போது 3-ம் நிலை நகராட்சி என்ற நிலையில் எந்த இடங்களும் இல்லை.

எனவே, தமிழ்நாடு நகராட்சிகள் சட்டத்தில் 3-ம் நிலை நகராட்சிகளுக்கான சட்டப்பிரிவுகள் தேவையற்றதாக கருதப்படுகிறது. எனவே அந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் வகையில் இந்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது.

மேலும், இந்த சட்டத் திருத்தத்தின்படி, 3-ம் நிலை நகராட்சிகள் என்ற பெயருக்கு பதிலாக பேரூராட்சிகள் என்ற பெயர் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story