அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் விருப்ப பாடமாக இந்தி படிப்பது தவறா? அமைச்சர் கேள்வி


அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்கள் விருப்ப பாடமாக இந்தி படிப்பது தவறா? அமைச்சர் கேள்வி
x
தினத்தந்தி 4 Dec 2019 11:30 PM GMT (Updated: 4 Dec 2019 8:09 PM GMT)

‘அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் விருப்ப பாடமாக இந்தியை தேர்வு செய்து படிப்பதில் என்ன தவறு இருக்கிறது?’ என்று அமைச்சர் பாண்டியராஜன் கேள்வி எழுப்பினார்.

சென்னை,

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் 101 மாணவர்கள் படித்து வருகிறார்கள். மாணவர்கள் பல மொழிகளை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக தமிழக அரசு சமீபத்தில் அரசாணை வெளியிட்டது. இதில் மாணவர்களின் விருப்ப பாடமாக ஒரு அயல்நாட்டு மொழியையும், ஒரு தேசிய மொழியையும் கற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் விருப்பப்படியே இந்தி மற்றும் பிரெஞ்சு கற்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வேறு மொழி பாடம் கற்பிக்கப்படும்.

இதுபோன்ற தமிழ் வளர்ச்சித்துறையின் திட்டங்களை தி.மு.க.வே பாராட்டி இருக் கிறது. ஆனால் தற்போது நச்சு கருத்துகளை தங்கம் தென்னரசு உள்ளிட்ட தி.மு.க.வினர் பரப்பி வருகிறார்கள். தமிழகத்தில் பல சி.பி.எஸ்.இ. பள்ளிகளை தி.மு.க.வினர் தான் நடத்துகிறார்கள். இந்த பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது.

ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்கள் விருப்ப பாடமாக இந்தியை தேர்வு செய்து படிப்பதில் என்ன தவறு இருக்கிறது?. எந்த மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை. தமிழக இளைஞர்கள் அறியாமை இருளில் இருக்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் நோக்கம்.

இதுவரை அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கு மட்டுமே முட்டுக்கட்டை போட்டு வந்த தி.மு.க., இப்போது தமிழாய்வு மாணவர்கள் வேற்று மொழி அறிவு பெற்று பொருளாதாரத்தில் வளர்ந்து விடக்கூடாது என்பதற்கும் முட்டுக்கட்டை போடுகிறது. ஆனாலும் தமிழாய்வு மாணவர்களை பன்மொழி இலக்கிய ஒப்பாய்வு செய்வதே உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் லட்சியம்.

மேலும், அடுத்த ஆண்டு சேலம், கோவை, திருச்சி ஆகிய மாநகரங்களில் ஏதேனும் ஒரு இடத்தில் உலக தமிழ் மாநாடு சிறப்புடன் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story