சென்னையில் வெங்காயத்தின் விலை சற்று குறைந்தது; கிலோ ரூ.150
சென்னையில் வெங்காயத்தின் விலை சற்று குறைந்தது. பெரிய வெங்காயம் கிலோ ரூ.150-க்கும், சின்ன வெங்காயம் கிலோ ரூ.160-க்கும் விற்பனையாகிறது.
சென்னை,
வரத்து குறைவால் கடந்த சில நாட்களக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.200 வரை விற்றது. இதனால் ஆங்காங்கே வெங்காய திருட்டு சம்பவங்கள் நடைபெற்றன.
வெங்காய விலை உயர்வை குறிப்பிட்டு ஏராளமான மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. திகார் சிறையில் 106 நாட்கள் இருந்து விட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சென்னை வந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சியினர் வெங்காய மாலை அணிவித்து வரவேற்றுள்ளனர்.
கடலூரில் நடைபெற்ற திருமணம் ஒன்றில், மணமகனின் நண்பர்கள் வெங்காயத்தால் ஆன பொக்கேவை பரிசாக வழங்கி உள்ளனர்.
வெங்காய விலை உயர்வு குறித்து பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெங்காய விலை பிரச்சினை நாடு முழுவதும் உள்ளதாகவும், இன்னும் 20 நாட்களில் வெங்காய விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் இன்று வெங்காயத்தின் விலை சிறிது குறைந்துள்ளதால் மக்கள் ஆறுதல் அடைந்துள்ளனர்.
இன்றைய காலை நேர நிலவரப்படி, ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை ரூ.20 குறைந்து ரூ.150 ஆகவும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.10 குறைந்து ரூ.160 ஆகவும் உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் படிப்படியாக குறைய வாயப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story