தமிழகத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 65 ஆயிரம் வழக்குகள் முடிவுக்கு வந்ததில் ரூ.395 கோடி சமரச தொகை


தமிழகத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் 65 ஆயிரம் வழக்குகள் முடிவுக்கு வந்ததில் ரூ.395 கோடி சமரச தொகை
x
தினத்தந்தி 14 Dec 2019 11:25 PM GMT (Updated: 14 Dec 2019 11:25 PM GMT)

தமிழகத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தில் சுமார் 65 ஆயிரம் வழக்குகளுக்கு முடிவு காணப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.395 கோடி சமரச தொகையாக கிடைத்துள்ளது.

சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, நாடு முழுவதும் நேற்று தேசிய லோக் அதாலத் நடத்தப்பட்டது. தமிழகத்தில், தமிழ்நாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு இந்த லோக் அதாலத்தை நேற்று நடத்தியது. இதில் விபத்து, காசோலை மோசடி, தொழிலாளர்கள், மின்சாரம், போக்குவரத்து, அரசு பணியாளர்கள் ஊதியம் தொடர்பானவை என 17 வகையான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

சென்னை ஐகோர்ட்டில் நீதிபதிகள் எம்.தண்டபாணி, பி.ராஜமாணிக்கம், ஜி.கே.இளந்திரையன், சி.சரவணன், ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி பி.தங்கவேல் ஆகியோர் தலைமையில் 5 அமர்வுகளும், ஐகோர்ட்டு மதுரை கிளையில் நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியம், எம்.கோவிந்தராஜ், ஜெ.நிஷாபானு, ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, டி.கிருஷ்ணவள்ளி, ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.ஆர்.ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் 6 அமர்வுகளும், மாவட்ட கோர்ட்டுகள் உள்பட மொத்தம் 516 அமர்வுகள் அமைக்கப்பட்டது.

ரூ.395 கோடி இழப்பீடு

இந்த 516 அமர்வுகளும் சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்தது. இதில் இருதரப்பினரிடமும் நடந்த சமரச பேச்சுவார்த்தையின்படி சுமார் 65 ஆயிரம் வழக்குகள் முடிவுக்கு வந்தன.

இதுகுறித்து தமிழநாடு மாநில சட்டப்பணி ஆணைக்குழு உறுப்பினர் செயலர் நீதிபதி கே.ராஜசேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நடந்த தேசிய லோக் அதாலத்தில் சுமார் 65 ஆயிரத்து 199 வழக்குகள் முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் 395 கோடியே 78 லட்சத்து 2 ஆயிரத்து 233 ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சமரச தொகையாக கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Next Story