புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னையில் 38 பெரிய மேம்பாலங்கள் உள்பட 75 மேம்பாலங்கள் மூடப்படும்


புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னையில் 38 பெரிய மேம்பாலங்கள் உள்பட 75 மேம்பாலங்கள் மூடப்படும்
x
தினத்தந்தி 31 Dec 2019 8:01 AM GMT (Updated: 31 Dec 2019 8:01 AM GMT)

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னையில் 38 பெரிய மேம்பாலங்கள் உள்பட 75 மேம்பாலங்கள் மூடப்படும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை

இன்று இரவு 12 மணிக்கு 2019-ம் ஆண்டு நிறைவு பெற்று 2020 புத்தாண்டு பிறக்கிறது.   2020 புத்தாண்டை மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் வரவேற்க உலகம் முழுவதும் பல்வேறு வகையான கோலாகல கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன.

சென்னையிலும் விபத்து இல்லாத, மகிழ்ச்சியான நிலையில் புத்தாண்டை வரவேற்பதற்காக சென்னை மாநகர போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். 

புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து காவல் ஆணையர் அலுவலகத்தில் கூடுதல் ஆணையர்கள் அருண் மற்றும் பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது கூடுதல் ஆணையர் அருண் கூறியதாவது:- 

மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா மற்றும் எலியட்ஸ் கடற்கரைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து காவல்துறையைப் பொறுத்தவரை 2500 காவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். உயிரிழப்பு இல்லாத புத்தாண்டை கொண்டாடுவது தங்களது முக்கிய நோக்கம்.  பைக் ரேஸை தடுக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை தடுக்க எல்லா விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, ஜி.எஸ்.டி. சாலை, அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் தனித்தனி குழுக்கள் மூலம் கண்காணிக்கப்படும். அதிகாலை வரையிலும் பைக் ரேஸ் விடுபவர்கள் கண்காணிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்படும் என அவர்  கூறினார். 

கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா கூறியதாவது:-

மெரினா முதல் அனைத்து கடற்கரை பகுதிகளிலும், மக்கள் கூடும் இடங்களிலும், ஆலயங்களிலும் கூடுதல் பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் .

அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடித்து விட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட செயல்களுக்கு போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நகரின் ஒவ்வொரு மூலையிலும் பொதுமக்களுக்கு ஏதேனும் இடர் ஏற்படும் நிலையில் காவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

விடுதிகள் விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். விடுதிகளை பொறுத்தவரையில் 1 மணிக்கு மேல் திறந்திருக்க கூடாது, கொள்ளளவை தாண்டி ஆட்களை அனுமதிக்க கூடாது, வாகன நிறுத்த ஏற்பாடுகளை சரியாக செய்ய வேண்டும், மது அருந்தியவர்கள் வாகனம் ஒட்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.  பெண்களின் பாதுகாப்பிற்காக அனைத்து அம்மா ரோந்து வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது;-

12 மணிக்குப் பிறகு இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் சென்னையில் உள்ள மேம்பாலங்களில் ‘மோட்டார் சைக்கிள் ரேஸ்’ நடத்தினார்கள். எனவே இந்த ஆண்டு அதைத் தடுக்கும் வகையில் இன்றிரவு சென்னையில் 38 பெரிய மேம்பாலங்கள் உள்பட 75 மேம்பாலங்கள் மூடப்படும். இன்றிரவு மேம்பாலங்களில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

இரு சக்கர வாகனங்களில் வருபவர்கள் மது அருந்தி இருந்தால், அவர்கள் தொடர்ந்து செல்ல போலீசார் அனுமதிக்க மாட்டார்கள். மது அருந்தியவர்கள், வேறு வாகனங்களில் செல்ல ஏற்பாடு செய்யப்படும். மறுநாள் காலை உரியவர்கள் தக்க ஆவணங்களுடன் வந்து மோட்டார் சைக்கிளை திரும்ப பெற்றுச் செல்லலாம் என கூறினார்.

Next Story