பணி மூப்பு அடிப்படையில் தீயணைப்பு வீரர்களுக்கு 3 மாதத்துக்குள் பதவி உயர்வு வழங்க வேண்டும்; தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
பணி மூப்பு அடிப்படையில் தகுதியான தீயணைப்பு வீரர்களுக்கு 3 மாதத்துக்குள் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தீயணைப்பு துறையில் முன்னணி தீயணைப்பு வீரராக பணிபுரிபவர்களுக்கு மாநில அளவிலான பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் வகையில், தமிழ்நாடு தீயணைப்பு பிரிவு சிறப்பு விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் அரசிதழ் வெளியிடப்பட்டது.
இதன்படி, தீயணைப்பு நிலைய அதிகாரிகளுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்ய ஆண்டு வாரியாக பணிமூப்பு பட்டியல் தயாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு முரணாக தீயணைப்பு துறை இயக்குனர், 172 பேரை நிலைய அதிகாரிகளாக தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி முன்னணி தீயணைப்பு வீரர்களான ராமசுப்பிரமணியன், முருகேசன், செல்வம் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல் ஜி.சங்கரன், ‘தகுதி இல்லாதவர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதால், தகுதியுடையவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, 2016-17, 2017-18, 2018-19 ஆகிய 3 ஆண்டுகளுக்கான பதவி உயர்வு பட்டியலை தயாரிக்க உத்தரவிட வேண்டும்’ என்று வாதிட்டார்.
அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு பிளடர் கே.புவனேஷ்வரி, ‘துறையின் சுமுக செயல்பாட்டுக்காகவே இந்த தற்காலிக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. வழக்கமான பதவி உயர்வு வழங்கும் வரை மட்டுமே இந்த தற்காலிக பதவி உயர்வு அமலில் இருக்கும். பதவி உயர்வுக்கு தகுதியான நபர்களின் பெயர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது’ என்று கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘அவசர காரணத்துக்காக தற்காலிக பதவி உயர்வு வழங்கி பிறப்பித்த உத்தரவில் தலையிட விரும்பவில்லை.
அதே சமயம் தீயணைப்பு துறையில் முன்னணி தீயணைப்பு வீரர்களாக பணியாற்றுபவர்களுக்கு, நிலைய அதிகாரியாக பதவி உயர்வு வழங்குவதற்கான பணிமூப்பு பட்டியலை தயாரித்து, 3 மாதங்களுக்குள் பதவி உயர்வு வழங்கி தமிழக உள்துறை செயலாளர், தீயணைப்பு துறை இயக்குனர், தீயணைப்பு துறை தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் உத்தரவிட வேண்டும்’ என கூறினார்.
Related Tags :
Next Story