தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடக்கம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து


தமிழக சட்டமன்ற நூற்றாண்டு விழா தொடக்கம் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 12 Jan 2020 11:15 PM GMT (Updated: 12 Jan 2020 8:52 PM GMT)

தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழா தொடங்கியதை முன்னிட்டு தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

1921-ம் ஆண்டு ஜனவரி 12-ம் நாள் கன்னாட் கோமகனால் தொடங்கி வைக்கப்பட்ட முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றத்தின் நூற்றாண்டு தொடக்க விழாவினை முன்னிட்டு, தி.மு.க. சார்பில் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சென்னை மாகாண மன்றத்திற்கு 30-11-1920 அன்று நிகழ்ந்த முதல் பொதுத்தேர்தலில், நீதிக்கட்சி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றி சுப்புராயலு ரெட்டி தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சரவை செயல்பட்ட இந்த மாகாண சுயாட்சி சட்டமன்றத்தின் பவள விழாவையும், 1935-ம் ஆண்டு இந்திய அரசமைப்பு சட்டத்தின் கீழ் முதன் முதலாக 1937-ம் ஆண்டு ஜூலை மாதம் ஏற்படுத்தப்பட்ட சென்னை சட்டப்பேரவையின் வைரவிழா நிகழ்ச்சியையும் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது வெகு விமரிசையாக கொண்டாடியதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். 14-7-1997 அன்று நடைபெற்ற அந்த மாபெரும் விழா “சட்டமன்ற வரலாற்றை” தமிழக இளைஞர்களுக்கு எல்லாம் நினைவூட்டிய அற்புதமான விழா என்பதை அனைவரும் அறிவர்.

தியாக வரலாறு

சாமானியர்களுக்கும் சரித்திர சிறப்புமிக்க சாதனைகளை அள்ளிக்கொடுத்த இந்த சட்டமன்றத்தின் நூற்றாண்டுடன், திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு வரலாறும் பின்னிப் பிணைந்திருப்பதும், நாட்டு மக்களின் நலனை முக்கிய நோக்கமாக கொண்டு அரிய பணியாற்றி, வியத்தகு சாதனைகளை நிகழ்த்திய பல அரும்பெரும் தலைவர்களின் தியாக வரலாறு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவில் சங்கமித்திருப்பதும், ஒவ்வொரு தமிழரும், இந்தியரும் எண்ணி எண்ணிப் பெருமைப்படத்தக்கவை.

தற்போது தொடங்கி உள்ள தமிழக சட்டப்பேரவையின் இந்த நூற்றாண்டு விழா நிறைவடையும்போது மக்களாட்சி மாண்புகளைக் காத்திடும் மேலுமொரு புதிய அத்தியாயம் விரைவில் உருவாவதற்கான களம் இப்போதே அமைந்துவிட்டது என்ற நம்பிக்கை பிறந்திருக்கிறது. அந்த புதிய நம்பிக்கையுடன் இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு மட்டுமின்றி ஜனநாயக ரீதியான விவாதங்களில் ஒட்டுமொத்த நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே எடுத்துக்காட்டாக, இந்த பெருமைமிக்க தமிழ்நாடு சட்டமன்றத்தின் எதிர்கால பணிகள் அமைந்திடுமாறு வழிகள் உருவாக்கப்பட்டு செப்பனிடப்படும் என்ற உறுதியினை அளித்து இந்த நூற்றாண்டு சாதனைச் சரித்திரத்தில் திராவிட இயக்க கொள்கைகள் வேரூன்றி, கம்பீரமான காலச் சுவடுகளாக பதிந்திருப்பதை எண்ணி அக மகிழ்கிறேன்.

சுயமரியாதை

அந்த திராவிட இயக்க ஆணி வேருக்கு மேலும் உரம் சேர்க்கவும், நம் சுயமரியாதை காக்கவும், தமிழினம் மற்றும் தமிழ்மொழியின் பெருமைகளை போற்றி பாராட்டி பாதுகாக்கவும், இளைஞர்கள் இன்முகத்துடனும், நம்பிக்கையுடனும் ஜனநாயக போர்ப்பரணி பாட ஆயத்தமாகிட வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story