மாநில செய்திகள்

மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டுகாளைகள் முட்டியதில் 96 பேர் காயம்மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் குவிந்தன + "||" + Jallikattu at Madurai Avaniyapuram, Palamet 96 people injured in oxen bulls

மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டுகாளைகள் முட்டியதில் 96 பேர் காயம்மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் குவிந்தன

மதுரை அவனியாபுரம், பாலமேட்டில் ஜல்லிக்கட்டுகாளைகள் முட்டியதில் 96 பேர் காயம்மாடுகளை அடக்கிய வீரர்களுக்கு பரிசுகள் குவிந்தன
மதுரை அவனியாபுரம் மற்றும் பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில், காளைகள் முட்டியதில் 96 வீரர்கள் காயம் அடைந்தனர்.
மதுரை, 

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறும்.

அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்றும், தை 2-ம் நாள் பால மேட்டிலும், 3-ம் நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.

இந்த ஆண்டு ஜல்லிக் கட்டு விழாவை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவை மதுரை ஐகோர்ட்டு நியமித்தது. இந்த குழுவில் மதுரை மாவட்ட கலெக்டர் வினய், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளும், பிரமுகர்களும் இடம் பெற்று உள்ளனர்.

பொங்கல் பண்டிகையான நேற்றுமுன்தினம் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் தினமான நேற்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளின்போது காளைகள் முட்டியதில் 96 பேர் காயம் அடைந்தனர்.

அவனியாபுரத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் பங்கேற்க 730 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்து இருந்தார்கள். 641 காளைகள் களம் இறக்கப்பட்டன.

14 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் தெருவைச் சேர்ந்த விஜய் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மோட்டார் சைக்கிள் பரிசாக வழங்கப்பட்டது.

2-வது பரிசை சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பரத் குமாரும், 3-வது பரிசை முத்துப்பட்டி திருநாவுக்கரசும் பெற்றனர்.

சிறந்த காளைக்கான முதல் பரிசை புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுராதாவின் காளையும், 2-வது பரிசை வில்லாபுரத்தைச் சேர்ந்த காந்தியின் காளையும், 3-வது பரிசை அன்புராணியின் காளையும் வென்றன.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 66 வீரர்கள் காயம் அடைந்தனர். அதில் படுகாயம் அடைந்த 9 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நேற்று ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்றது. அங்குள்ள மஞ்சள்மலை சுவாமி ஆற்று திடல் வாடி வாசலில் இருந்து காளைகள் சீறிப்பாய்ந்தன.

மதுரை மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் வந்திருந்து பார்வையாளர்கள் பகுதியில் அமர்ந்து போட்டியை ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

காளைகள் அனைத்தும் நேற்றுமுன்தினம் இரவே பாலமேட்டுக்கு கொண்டு வரப்பட்டன. காலை 6 மணி முதல் மக்கள் வெள்ளத்தில் ஜல்லிக் கட்டு திடல் நிரம்பி வழிந்தது. அங்கு 2 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

காலை 8 மணிக்கு ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் மேற்பார்வையில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கலெக்டர் வினய் தலைமையில் போட்டிகள் தொடங்கின. முன்னதாக வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதை வீரர்கள் யாரும் பிடிக்கவில்லை. அதன் பின்னர் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.

வீரர்களுக்கு பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா ஆகிய நிறங்களில் பனியன் வழங்கப்பட்டு இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு 75 வீரர்கள் வீதம் களத்தில் இறக்கி விடப்பட்டனர். சீறி வந்த காளைகளின் திமில்களை பிடித்து வீரர்கள் அடக்க பாய்ந்தனர்.

போட்டியில் பங்கேற்ற சில காளைகள் பாய்ந்து வந்து வீரர்களை சிதறடித்ததுடன், அங்கும் இங்குமாக திரும்பி வேடிக்கை காண்பித்தன. காளைகள் வெளியேறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததால் லேசாக தடியடி நடத்தப்பட்டது.

மாலை 4 மணிக்கு ஜல்லிக் கட்டு முடியும் நிலையில், அதிகமான காளைகள் அவிழ்த்துவிட வேண்டி இருந்ததால் கூடுதலாக ஒரு மணி நேரம் ஜல்லிக்கட்டு நடத்த நீதிபதி அனுமதி அளித்தார். இதனால் மாலை 5 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. மொத்தம் 700 காளைகள் பதிவு செய்யபட்ட நிலையில் 658 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 675 வீரர்கள் கலந்து கொண்டனர்.

காளைகளின் திமிலை பிடித்து அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளுக்கும் தங்க, வெள்ளி காசுகள், சைக்கிள், கட்டில், பீரோ, அண்டா உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், எம்.எல். ஏ.க்கள் மாணிக்கம், மூர்த்தி ஆகியோர் சார்பில் தங்க காசுகள் வழங்கப்பட்டன.

16 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராக தேர்ந்தெடுக்கப்பட்ட மதுரை மாவட்டம் பொதும்பு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரனுக்கு முதல் பரிசாக கார் வழங்கப்பட்டது. 2-வது பரிசை அய்யப்பன் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராஜாவும் (25), 3-வது பரிசை கார்த்திக்கும் (20) பெற்றனர்.

சிறந்த காளைக்கான முதல் பரிசை திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் காளை தட்டிச் சென்றது. ரமேசுக்கு காங்கேயம் பசுமாடு கன்றுக்குட்டியுடன் வழங்கப்பட்டது. 2-வது பரிசுக்கு திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியப்பட்டியைச் சேர்ந்த செல்வத்தின் காளை தேர்வு செய்யப்பட்டு, மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. மதுரை பழங்காநத்தத்தைச் சேர்ந்த கார்த்திக்கண்ணனின் காளை 3-வது பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டது.

பாலமேடு ஜல்லிக்கட்டின் போது காளைகள் முட்டியதில் 30 வீரர்கள் காயம் அடைந்தனர். அவர்களில் பலத்த காயம் அடைந்த பாலமேட்டைச் சேர்ந்த பிரபு (25), அழகுபாண்டி(32), அலங்காநல்லூர் ரமேஷ் (27), ரகு (20), கார்த்திக் (25), பிரசாத் (32), தேனி மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஏட்டு அழகுராஜா (40), அய்யூரைச் சேர்ந்த செல்வக்குமார் (40) உள்பட 10 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விழா பாதுகாப்பு பணியில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன் மேற்பார்வையில், டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மதுரை சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 1,500 பேர் ஈடுபட்டு இருந்தனர்.

இதேபோல் திருச்சி அருகே உள்ள சூரியூரிலும் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. போட்டியின் போது சீறிப்பாய்ந்து வந்த காளைகள் தூக்கி வீசியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 29 பேர் காயம் அடைந்தனர்.

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. அங்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.