“ஓட்டுக்கு பணம் தருபவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்” கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை


“ஓட்டுக்கு பணம் தருபவர்களை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்”   கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை
x
தினத்தந்தி 25 Jan 2020 11:15 PM GMT (Updated: 2020-01-26T04:27:49+05:30)

ஓட்டுக்கு பணம் தருகிறவர்களை வீடுகளில் அனுமதிக்க வேண்டாம் என்று கவர்னர் பன்வாரிலால் புரோகித் அறிவுரை வழங்கினார்.

சென்னை, 

சென்னை கலைவாணர் அரங்கத்தில் 10-வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்றார். அப்போது அவர், தேர்தல் குறித்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட புத்தகத்தை வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் கே.சண்முகம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, கவர்னரின் செயலாளர் ஆனந்தராவ் பாட்டில், மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி, சென்னை மாவட்ட கலெக்டர் சீத்தாலட்சுமி, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், கவர்னர் பன்வாரிலால் புரோகித் பேசியதாவது:-

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் நாம் வசிக்கிறோம். நாம் நீண்டகாலமாக ஓட்டுரிமையை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம் என்பதே மிகுந்த மகிழ்ச்சிக்கு உரிய ஒன்று. இதன்மூலம் பிரதிநிதிகளை தேர்வு செய்து, நமது ஜனநாயக பாரம்பரியத்தை வலுவாக நிலைக்கச் செய்கிறோம். நேர்மையாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் தேர்தலை நடத்துவதில் இந்திய தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

ஜனநாயகத்தின் எதிர்காலம்

வாக்காளர் பட்டியலில் அதிக வாக்காளர்களை இடம் பெறச் செய்வதற்கான வசதிகளையும், ஊக்கத்தையும் அனைவருக்கும் குறிப்பாக இளைஞர்களுக்கு அளிப்பதுதான் வாக்காளர் தின கொண்டாட்டத்தின் நோக்கமாக உள்ளது. தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்கும் வகையில் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நாள் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது.

இதில் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுதான் ஜனநாயகத்தின் எதிர்காலத்துக்கு முக்கியமானதாக உள்ளது. தேர்தலைப் பற்றிய அறிவூட்டும் திட்டங்களின் மையமாக இளைஞர்களும், எதிர்கால வாக்காளர்களும் வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஜனநாயகத்தில் பங்காற்றுவதற்காக முழுமையாக அவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள முடியும்.

தேர்தல் நடவடிக்கைகளில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்பதுதான் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு வழி வகுக்கும். எந்தவொரு ஜனநாயக ரீதியான தேர்தலிலும் மக்கள்தான் கதாநாயகர்கள்.

பெற்றோரை வற்புறுத்துங்கள்

தேர்தலில் 9 முறை நான் போட்டியிட்டுள்ளேன். மூன்று முறை எம்.பி.யாகவும், 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் தேர்வாகி இருக்கிறேன். முன்பு, நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாக வேட்பாளர் செலவு செய்தால், அந்த செலவு கணக்கு கட்சியின் செலவு கணக்கில் சேர்க்கப்பட்டது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்து புதிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தினேன்.

ஒவ்வொரு மாணவ, மாணவியும் வாக்குப்பதிவு நாளன்று விழிப்புடன் இருங்கள். வீட்டில் இருக்கும் பெற்றோரை ஓட்டு போட்டுவிட்டு வர வற்புறுத்துங்கள். ஓட்டுக்காக பணம் கொண்டு வரும் அரசியல்வாதி உள்ளிட்ட எவரையும் வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

கலெக்டர்களுக்கு பரிசு

இதைத்தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பரிசுகள் வழங்கினார். மேலும், தகவல் தொடர்பு, வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, வாக்காளர் சரிபார்ப்பு பணி உள்ளிட்ட தேர்தல் நடவடிக்கைகளில் மிகச்சிறப்பாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு கவர்னர் கேடயங்களை வழங்கி பாராட்டினார். அந்த வகையில் நெல்லை கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி, பெரம்பலூர் கலெக்டர் வி.சாந்தா ஆகியோர் கேடயங்களை பெற்றனர்.

அதேபோல, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சப்-கலெக்டர் சரண்யா அரி, தேனி மாவட்டம் உத்தமபாளையம் சப்-கலெக்டர் (தற்போது பொள்ளாச்சி) வி.வைத்யநாதன், பெரியகுளம் வருவாய் கோட்ட அதிகாரி சி.ஜெயபிரீத்தா, கடலூர் மாவட்டம் சிதம்பரம் சப்-கலெக்டர் விஷு மகராஜன், சென்னை மாநகராட்சி இணை ஆணையர் (வருவாய், நிதி) ஆர்.லலிதா, உதவி கல்வி அதிகாரி வி.முனியன், விழுப்புரம் மாவட்ட கல்வி அதிகாரி கே.கிருஷ்ணபிரியா ஆகியோர் கவர்னரிடம் இருந்து பரிசுகளை பெற்றனர்.

மேலும், சிறப்பாக செயல்பட்ட வாக்குச்சாவடி அளவிலான 10 அலுவலர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் சுனில் அரோராவின் தேசிய வாக்காளர் தின உரை ஒளிபரப்பப்பட்டது.

Next Story