குரூப்-4 தேர்வு மோசடி வழக்கில் அதிரடி சோதனை முக்கிய குற்றவாளி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்


குரூப்-4 தேர்வு மோசடி வழக்கில் அதிரடி சோதனை முக்கிய குற்றவாளி வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்
x
தினத்தந்தி 30 Jan 2020 11:45 PM GMT (Updated: 2020-01-31T00:52:13+05:30)

குரூப்-4 தேர்வு மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இடைத்தரகர் ஜெயக்குமார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள்.

சென்னை, 

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்திய குரூப்-4 தேர்வு மோசடி வழக்கு விஸ்வரூபம் எடுத்து உள்ளது. பேஜிக் பேனா, நடுவழியில் வேனை நிறுத்தி விடைத்தாள் திருத்தம் என்று சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவுக்கு இந்த மோசடி சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த முறைகேட்டில் ஈடுபட்டு குறுக்கு வழியில் தேர்வான 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதுடன், அவர்கள் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதுவதற்கு டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் தடை விதித்து உள்ளது. இந்தநிலையில் குரூப்-4 தேர்வு மோசடி தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 25-ந்தேதி வழக்குப்பதிவு செய்து அதிரடி விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை மட்டுமின்றி மதுரை, சிவகங்கை, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை அடிப்படையில் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஓம் காந்தன், பள்ளி கல்வித்துறை ஊழியர், இடைத்தரகர்கள், தேர்வர்கள் என இதுவரையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமார் கருதப்படுகிறார். இவர் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து குடும்பத்துடன் தலைமறைவாக உள்ளார். இந்தநிலையில் சென்னை முகப்பேரில் உள்ள அவரது வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனை நடத்த திட்டமிட்டனர். இதற்காக நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்றனர்.

அந்த அனுமதி ஆணையுடன் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. சந்திரசேகர் தலைமையில் 5 பேர் அடங்கிய தனிப்படை போலீசார் நேற்று முகப்பேர் வந்தனர். ஜெயக்குமாரின் வீட்டின் கதவு மூடப்பட்டு இருந்தது. அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனை இரவு வரை நீடித்தது. இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.

ராமேசுவரம், சிவகங்கை கருவூலத்தில் இருந்து குரூப்-4 வினாத்தாள் திருத்துவதற்காக சென்னை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு கூரியர் நிறுவன வேன் மூலம் எடுத்து வரப்பட்டது. இந்த வேனை நடுவழியில் நிறுத்தி வினாத்தாள்கள் திருத்தப்பட்டது. எனவே இந்த விவகாரம் தொடர்பாக கூரியர் நிறுவன ஊழியர்கள் 3 பேரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று விசாரணை நடத்தினார்கள். மேலும் டி.என்.பி.எஸ்.சி. ஊழியர் ஒருவரிடம் விசாரணை நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விசாரணையின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் கைது நடவடிக்கை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story