தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் மக்களை கவரும் புதிய அறிவிப்புகள் வெளியாகிறது


தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் மக்களை கவரும் புதிய அறிவிப்புகள் வெளியாகிறது
x
தினத்தந்தி 14 Feb 2020 12:00 AM GMT (Updated: 2020-02-14T10:31:36+05:30)

2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்யப்படுகிறது. அ.தி.மு.க. அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை இது என்பதால், மக்களை கவரும் புதிய அறிவிப்புகள் வெளியாகிறது.

சென்னை, 

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 6-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் 9-ந்தேதி வரை நடந்து முடிந்தது. அதன்பின்னர், 2020-2021-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.

அதன் ஒரு பகுதியாக, கடந்த மாதம் 20-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பட்ஜெட்டில் என்னென்ன புதிய அறிவிப்புகள் இடம்பெற வேண்டும்?, பட்ஜெட்டை எந்தத் தேதியில் தாக்கல் செய்ய வேண்டும்? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 7-ந்தேதி தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டசபை மண்டபத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவித்தார்.

அதன் அடிப்படையில், துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தற்போதைய அரசின் கடைசி முழு நிதிநிலை அறிக்கை இது என்பதால், புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருக்கின்றன. அடுத்த ஆண்டு (2021) சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கு முன்னதாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நகர்ப்புற மற்றும் மாநகராட்சி பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தலும் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், தமிழக பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்கும் என்று தெரிகிறது.

மேலும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்று, நாளையுடன் (சனிக்கிழமை) 3 ஆண்டுகள் நிறைவடைந்து 4-வது ஆண்டு தொடங்குகிறது. எனவே, அதன் அடிப்படையிலும், புதிய சலுகைகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக, வேளாண் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனால், வேளாண் கடன்கள் தள்ளுபடி ஆகுமா? என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

துணை முதல்-அமைச்சரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையை வாசித்து முடித்ததும், இன்றைய கூட்டம் முடிவடையும். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், பட்ஜெட் மீதான விவாதத்தை எத்தனை நாள் நடத்துவது? என்பது குறித்து விவாதிக்கப்படும். அனேகமாக, வரும் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்று தெரிகிறது.

தொடர்ந்து, வரும் 24-ந்தேதி முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த காலங்களில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் என்பது ஜூன் மாதங்களிலேயே நடைபெற்றுள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதற்கு முன்னதாக மானியக் கோரிக்கை விவாதத்தை நடத்தி முடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. மார்ச் மாதம் 3-வது வாரம் வரை இந்த விவாதம் நடைபெறும் என்றும் தெரி கிறது.

இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டிருக்கிறது. முக்கியமாக, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று ஏற்கனவே, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டசபை செயலாளரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். எனவே, அது குறித்து சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் குரல் கொடுப்பார்கள்.

மேலும், குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், காவல் துறைக்கு வாக்கி-டாக்கி வாங்கியதில் நடந்த முறைகேடு குறித்தும் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் என்பதால், இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கும் பஞ்சமிருக்காது என்றே தெரிகிறது.

Next Story