வேலைநிறுத்தம் அறிவித்துள்ள மெட்ரோ ரெயில் தொழிற்சங்கத்துடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை - உடன்பாடு ஏற்படாததால் 22-ந்தேதி மீண்டும் நடக்கிறது


வேலைநிறுத்தம் அறிவித்துள்ள மெட்ரோ ரெயில் தொழிற்சங்கத்துடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை - உடன்பாடு ஏற்படாததால் 22-ந்தேதி மீண்டும் நடக்கிறது
x
தினத்தந்தி 18 Feb 2020 10:30 PM GMT (Updated: 2020-02-19T03:53:54+05:30)

வேலைநிறுத்தம் அறிவித்துள்ள மெட்ரோ ரெயில் தொழிற்சங்கத்துடனான 2-ம் கட்ட பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து 3-ம் கட்ட பேச்சுவார்த்தை 22-ந்தேதி நடக்கிறது.

சென்னை, 

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 29-ந்தேதி முதல் 3 நாட்கள் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடந்த பேச்சுவார்த்தை மூலம் இப்போராட்டம் கைவிடப்பட்டது. அப்போது வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை கூடாது, ஏற்கனவே பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை உடனடியாக பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இந்த கோரிக்கைகளை ஏற்கப்படவில்லை.

இதையடுத்து வருகிற 25-ந்தேதிக்கு பிறகு வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக சென்னை மெட்ரோ ரெயில் தொழிலாளர் சங்கம் அறிவித்தது. தொழிலாளர் நல ஆணையரிடம் நோட்டீசும் வழங்கப்பட்டது.

இதையடுத்து தொழிலாளர் உதவி நல ஆணையர் முன்னிலையில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினர் இடையேயான முத்தரப்பு பேச்சுவார்த்தை சென்னை பாரிமுனையில் உள்ள குறளகத்தில் நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நேற்று குறளகத்தில் மீண்டும் நடந்தது.

தொழிலாளர் உதவி நல ஆணையர் ஜெயலட்சுமி தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினர் மற்றும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் முடிவு எடுக்கக்கூடிய அதிகாரிகள் யாரும் வராததாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். இதனால் இந்த பேச்சுவார்த்தையிலும் முடிவு எட்டப்படாமல் போனது.

ஆனாலும் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகளிடம் பேசி நல்ல முடிவு எட்ட செய்வதாக தொழிலாளர் உதவி நல ஆணையர் கொடுத்த உறுதி அளித்தார். இதையடுத்து 3-ம் கட்ட பேச்சுவார்த்தை வருகிற 22-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெற இருக்கிறது. பேச்சுவார்த்தை குறளகம் அல்லது தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் தொழிலாளர் நல ஆணையரகத்தில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story