சென்னையில் தடையை மீறி போராட்டம்: 10 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு


சென்னையில் தடையை மீறி போராட்டம்: 10 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 20 Feb 2020 8:30 PM GMT (Updated: 20 Feb 2020 6:16 PM GMT)

சென்னையில் தடையை மீறி போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னை,

குடியுரிமை திருத்த சட்டம்(சி.ஏ.ஏ), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு(என்.பி.ஆர்.) ஆகியவற்றிற்கு எதிராக இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று பேரணி, ஆர்ப்பாட்டம் நடந்தது.

சென்னை ஐகோர்ட்டு தடையை மீறி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்தாசிடம் புகார் மனு அளித்தார். அதில், ‘சட்டமன்றம் நடந்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற போராட்டங்கள் நடத்தக்கூடாது என்று கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது எனக்கூறியும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கேட்கவில்லை. எனவே சட்டவிரோதமாக ஒன்றுக்கூடி பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இஸ்லாமிய கூட்டமைப்புகளின் தலைவர் காஜா மொய்தீன், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்ற தி.மு.க. துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, இஸ்லாமிய தலைவர்கள் என 39 பேர் மீதும், போராட்டத்தில் பங்கேற்ற 1,500 முஸ்லிம் பெண்கள் உள்பட 10 ஆயிரம் பேர் மீதும் சட்டவிரோதமாக கூடுதல் உள்பட 2 பிரிவுகளின் கீழ் திருவல்லிக்கேணி போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில் சி.ஏ.ஏ., என்.ஆர்.சி. என்.பி.ஆர். ஆகியவற்றிற்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை வண்ணாரப்பேட்டையில் முஸ்லிம்கள் போராட்டம் தொடர்ந்து 7-வது நாளாக நேற்று நீடித்தது.

அவர்களுடைய போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத், உலக தமிழர் பேரவை தலைவர் பழ.நெடுமாறன், தமிழக காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் எச்.வசந்தகுமார், மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர் ஏ.ஜி.மவுரியா உள்ளிட்டோர் நேற்று பங்கேற்று பேசினார்கள்.

சி.ஏ.ஏ. உள்பட சட்டங்களை ஏற்க மாட்டோம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் வண்ணாரப்பேட்டை பகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது.

Next Story