மாநில செய்திகள்

இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய கமல்ஹாசன், காஜல் அகர்வால், பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள் + "||" + Indian -2 shooting accident narrowly survived Kamal, Kajal Agarwal, Tender Information about victims

இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய கமல்ஹாசன், காஜல் அகர்வால், பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து: மயிரிழையில் உயிர் தப்பிய கமல்ஹாசன், காஜல் அகர்வால், பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்
இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்தில் நடிகர் கமல்ஹாசன், நடிகை காஜல் அகர்வால், இயக்குனர் ஷங்கர் ஆகியோர் மயிரிழையில் உயிர் தப்பிய தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை, 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன்-2 படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள படப்பிடிப்பு தளத்தில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை படப்பிடிப்பு தளத்தில் மிக உயரமான ராட்சத கிரேனில் மின்விளக்குகளை பொருத்தி சில காட்சிகள் படம் பிடிக்கப்பட்டது.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று கிரேன் சரிந்து விழுந்தது. இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் படக்குழுவை சேர்ந்த மான்சி, வாசு, ரம்ஜான், அருண் பிரசாத், குமார், கலைசித்ரா, குணபாலன், திருநாவுக்கரசு, முருகதாஸ் ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர். இறந்த 3 பேரின் உடல்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கிரேன் விழுந்த இடத்தில்தான் கமல்ஹாசனும், காஜல் அகர்வாலும் இருந்துள்ளனர். இயக்குனர் ஷங்கரும் அங்கேயே நின்றிருந்தார். அவர்கள் அந்த இடத்தில் இருந்து நகர்ந்த சில வினாடிகளிலேயே இந்த விபத்து நடந்துள்ளது. இதனால் அவர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக மயிரிழையில் உயிர் தப்பினர்.

இந்தநிலையில் நேற்று மதியம் நடிகர் கமல்ஹாசன் இறந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கீழ்ப்பாக் கம் ஆஸ்பத்திரிக்கு வந்தார்.

அங்கு அஞ்சலி செலுத்திவிட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

இந்த விபத்து தவிர்த்திருக்க கூடிய ஒன்று. இது என் குடும்பத்தில் நடந்த விபத்தாக கருதுகிறேன். நான் இங்கு ஒரு நிறுவனத்தை சார்ந்து வரவில்லை. இந்த தொழிலில் பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

இது போன்ற சம்பவம் இனி நடைபெறாமல் இருக்க, சினிமா துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சினிமா துறை ஒரு கடைநிலை ஊழியனுக்கு பாதுகாப்பு அளிக்க முடியாத துறையாக இருப்பது அவமானத்துக்கு உரியதாக நான் கருதுகிறேன்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நான் ரூ.1 கோடி நிதி உதவி அளிக்கிறேன். நான் அறிவித்த இந்த தொகை, நடந்த உயிர் சேதத்துக்கான பரிகாரம் அல்ல. அவர்கள் குடும்பத்தை பாதுகாப்பதற்காக.

இனி இது போன்ற படப்பிடிப்புகளில் கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு இருக்க வேண்டும். அவர்களுக்கு இன்சூரன்ஸ் இருக்க வேண்டும். இவை அனைத்தும் கிடைப்பதற்கு சினிமா துறை துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

நான் இந்த விபத்தில் நூலிழையில் உயிர் தப்பி உள்ளேன். ஒரு 2 அடி முன்னால் சென்றிருந்தால் நானும் இறந்திருக்க கூடும். என்னைப்போல் படத்தின் இயக்குனரும், கதாநாயகியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளனர். விபத்துக்கு ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு கிடையாது. கடைநிலை ஊழியனுக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற கடைமை அனைத்து துறைகளுக்கும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களின் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் சரிந்து விழுந்து 3 பேர் பலியான சம்பவம் திரையுலகினரை உலுக்கி உள்ளது. சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். நடிகை பூஜாகுமார் தனது டுவிட்டர் பதிவில், “இந்த மோசமான விபத்தால் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். எனக்கு பிடித்த கிருஷ்ணாவின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணாவுடன் விஸ்வரூபம் படத்தில் பணியாற்றினேன். அந்த நினைவுகளை எப்போதும் என்னால் மறக்க முடியாது. இவ்வளவு சீக்கிரம் அவர் பிரிந்தது வேதனை அளிக்கிறது. பலியானவர்கள் குடும்பத்துக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் பார்த்திபன் டுவிட்டரில், “அறுந்து விழுந்த கிரேன் கனவு தகர்ந்த மூவர். ஆனால் அவர்களின் குடும்பங்களும், நண்பர்களும், சங்கரும், கமல் சாரும் நிலைகுலைந்தே போயிருப்பார்கள். ஆழ்ந்த இரங்கல்” என்று கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யா, “இந்த விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மனமுடைந்து போனேன். அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும். காயமுற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று கூறியுள்ளார். நடிகர் பிரசன்னா, நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.