‘ஹெல்மெட்’ அணியாமல் செல்பவர்களை தாக்குவதா? - டி.ஜி.பி. விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு


‘ஹெல்மெட்’ அணியாமல் செல்பவர்களை தாக்குவதா? - டி.ஜி.பி. விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு
x
தினத்தந்தி 21 Feb 2020 11:30 PM GMT (Updated: 21 Feb 2020 11:22 PM GMT)

‘ஹெல்மெட்’ அணியாமல் செல்பவர்களை தாக்குவது குறித்து டி.ஜி.பி. விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

சென்னை ஒட்டேரி பகுதியில் புளியந்தோப்பு போக்குவரத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அந்த வழியாக ‘ஹெல்மெட்’ அணியாமல் மோட்டார்சைக்கிளில் வந்த சுரேந்தர்(வயது 19) என்பவரை சப்-இன்ஸ்பெக்டர் மடக்கி பிடித்தபோது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, சுரேந்தரை சப்-இன்ஸ்பெக்டர் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சுரேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இந்த விவகாரம் குறித்து மாநில மனித உரிமை ஆணையத்தின் நீதிபதி துரை ஜெயச்சந்திரன் தாமாக முன்வந்து(சூமோட்டோ) வழக்காக எடுத்து விசாரித்தார்.

அப்போது, சப்-இன்ஸ்பெக்டரின் இந்த செயலை கண்டித்த நீதிபதி, இது மனித உரிமை மீறல் ஆகாதா? என்று கேள்வி எழுப்பினார். மேலும், இந்த விவகாரம் சம்பந்தமாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மீது எடுத்த நடவடிக்கை என்ன? எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து போலீஸ் டி.ஜி.பி., வேப்பேரி போக்குவரத்து கூடுதல் கமிஷனர் ஆகியோர் 2 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

Next Story