காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில்: தென்கலை, வடகலை பிரிவினர் மீது புகார் செய்ய வேண்டும் - அறநிலையத்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில்: தென்கலை, வடகலை பிரிவினர் மீது புகார் செய்ய வேண்டும் - அறநிலையத்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 27 Feb 2020 11:45 PM GMT (Updated: 27 Feb 2020 11:20 PM GMT)

காஞ்சீபுரம் கோவிலில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுத்தும் தென்கலை, வடகலை பிரிவினர் மீது போலீசில் புகார் செய்ய வேண்டும் என அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரபந்தம் மற்றும் மந்திரம் பாடுவதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையில் பல ஆண்டுகளாக மோதல் இருந்து வந்தது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் கடந்த 1910-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதிகள் சங்கரன்நாயர், ஓல்டுபீல்டு ஆகியோர் சாமி சிலைக்கு முன்பு பிரபந்தம், மந்திரம் பாடுவது வழிபாடு செய்வதற்குதான் என்று கருத்து கூறி சில விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டனர்.

இதேபோல கடந்த 1969-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் மற்றொரு உத்தரவை பிறப்பித்து இருந்தது. சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுகளின்படி, முதலில் தென்கலை பிரிவினரும், அதன்பின்னர் வடகலை பிரிவினரும் பிரபந்தம் பாடவேண்டும்.

ஆனால், இந்த உத்தரவுகளுக்கு எதிராக காஞ்சீபுரம் கோவில் உதவி ஆணையர் செயல்படுவதாக கூறி, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது உதவி ஆணையர் சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளடர் எம்.கார்த்திகேயன், ‘கோவிலில் யார் முதலில் பாடுவது என்பதில் வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவதால் சாமிக்கு நடைபெறவேண்டிய பூஜைகள் பாதிக்கப்படுகிறது.

இருதரப்பினருக்கும் இடையிலான பிரச்சினைக்கு தீர்வு காண மேற்கொண்ட முயற்சிகளும் தோல்வியடைந்து விட்டது’ என்று கூறினார்.

இதையடுத்து நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

கோவில்களில் மந்திரங்கள், பிரபந்தம் உச்சரிப்பது அடிப்படை உரிமை. அதை நீதிமன்றம் தடுக்க முடியாது. இரு பிரிவினருக்கு இடையிலான பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிரபந்தம் பாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, 1915 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். பொது வழிபாட்டுத்தலமான கோவிலில், தனிநபர் பகைக்கோ, எதேச்சதிகாரத்துக்கோ இடமில்லை. பொதுமக்கள் நலன்கருதியும், சந்தர்ப்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டும் கீழ்க்கண்ட உத்தரவுகளை பிறப்பிக்கிறேன்.

பூஜை காலங்களில் முதலில் தென்கலை பிரிவினரை அழைக்க வேண்டும். அவர்கள், ஸ்ரீசைலா தயாபாத்திரத்தில் முதல் 2 வரிகளை மட்டும் பாடவேண்டும். அதன்பின்னர் வடகலை பிரிவினர், ஸ்ரீராமானுஜ தயாபாத்திரத்தில் முதல் 2 வரிகளை பாடவேண்டும்.

அதன்பின்னர் தென்கலை, வடகலை பிரிவினர்கள் இருவரும் ஒன்றாக பிரபந்தம் பாடவேண்டும். பிரபந்தம் பாடியபின்பு, இறுதியாக தென்கலையினர் மணவாளமாமுனிகள் வழித்திருநாமத்தையும், வடகலையினர் தேசிகன் வழித்திருநாமத்தையும் பாடி, பூஜையை முடிக்க வேண்டும். இந்த ஐகோர்ட்டு உத்தரவை இரு பிரிவினர்களில் யாராவது ஒரு பிரிவினர் பின்பற்ற மறுப்பு தெரிவித்தால், மந்திரம் அல்லது பிரபந்தம் பாட முன்வரும் மற்றொரு பிரிவினருக்கு அனுமதி வழங்கவேண்டும்.

பூஜை காலங்களில் இந்த விவகாரம் குறித்து தகுந்த உத்தரவுகளை உதவி ஆணையர் பிறப்பிக்க வேண்டும். இந்த இருபிரிவினர்களில் யாராவது பூஜை காலங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தினால், உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் உதவி ஆணையர் புகார் செய்ய வேண்டும்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சட்டப்படி தகுந்த நடவடிக்கைகளை உரியவர்கள் மீது எடுக்க வேண்டும். இந்த ஐகோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாதவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை உதவி ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த உத்தரவு வருகிற மார்ச் 1-ந்தேதி முதல் அமலுக்கு வரவேண்டும். இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

Next Story