நீலாங்கரை கடற்கரை அருகே உள்ள சசிகலா அக்கா மகன் வீட்டை இடிக்க தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு


நீலாங்கரை கடற்கரை அருகே உள்ள சசிகலா அக்கா மகன் வீட்டை இடிக்க தடை இல்லை - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 28 Feb 2020 9:30 PM GMT (Updated: 28 Feb 2020 9:33 PM GMT)

நீலாங்கரை கடற்கரை அருகே கட்டப்பட்டுள்ள சசிகலாவின் அக்கா மகன் வி.பாஸ்கரனின் வீட்டை இடிக்க மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை ஐகோர்ட்டு மறுத்து விட்டது. சசிகலாவின் அக்கா மகன் வி.பாஸ்கரன் சென்னை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சென்னை, 

நீலாங்கரை, ப்ளூ பீச் சாலையில் ஒரு ஏக்கர் நிலத்தில், 8 ஆயிரத்து 100 சதுர அடி பரப்பளவு கொண்ட சொகுசு வீடு கடந்த 1993-ம் ஆண்டு கட்டப்பட்டது. அந்த வீட்டின் உரிமையாளரிடம் இருந்து கடந்த 2003-ம் ஆண்டு வீட்டை நான் விலைக்கு வாங்கினேன். இந்த வீட்டிற்கு பஞ்சாயத்து அனுமதி முறையாக வாங்கப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமும் (சி.எம்.டி.ஏ.விடமும்) 1999-ம் ஆண்டு அனுமதி பெறப்பட்டுள்ளது.

நான் வீட்டை வாங்கிய நாள் முதல் சொத்து வரி உள்ளிட்ட அனைத்து வரிகளையும் செலுத்தி வருகிறேன். இந்த நிலையில், சென்னை ஈஞ்சம்பாக்கம் முதல் உத்தண்டி வரையில் கடற்கரை அருகே சட்ட விரோதமாக கட்டிடங்கள் கட்டப்பட்டது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளின் விசாரணையின் போது, விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக மாநகராட்சி சார்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் என் வீட்டை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது வீடு தொடர்பான எந்த ஒரு ஆவணங்களையும் அதிகாரிகள் கேட்கவில்லை. 2011-ம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டலம் அறிவிப்பாணையின்படி, ரூ.5 கோடிக்கு மேல் முதலீடு செய்து கட்டப்படும் துறைமுகம், கலங்கரை விளக்கம், அனல்மின் நிலையம் உள்ளிட்டவைகளுக்குத்தான் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையிடம் அனுமதி பெறவேண்டும்.

விவசாயத்துடன் கூடிய பண்ணை வீடுகளை கட்ட அனுமதி பெற தேவையில்லை. மேலும், என்னுடைய வீடு கடற்கரையில் இருந்து 400 மீட்டர் தூரம் தள்ளிதான் உள்ளது. இந்த நிலையில், என்னுடைய வீடு விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கூறி, வீட்டை ‘சீல்’ வைத்து பூட்டி, அதை இடிப்பதற்கு கடந்த ஜனவரி 28-ந்தேதி சென்னை மாநகராட்சி 9-வது மண்டல செயற்பொறியாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும். இந்த நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஆர்.எம்.டி. டீக்காராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிறப்பு அரசு பிளடர் வி.சண்முகசுந்தர் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து, மாநகராட்சி அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். இந்த வழக்கிற்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம்(மார்ச்) 10-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Next Story