நீண்ட நேரம் ‘முகநூல்’ பார்த்ததை தந்தை கண்டித்ததால் மாணவி தற்கொலை
செல்போனில் நீண்ட நேரம் முகநூல் பதிவுகளை பார்த்து ‘சாட்’ செய்து கொண்டிருந்ததை தந்தை கண்டித்ததால் மனம் உடைந்த கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சேலம்,
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே வசித்து வருபவர் கோவிந்தன். இவர் அச்சகம் மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராணி. இவர்களுக்கு பிரசாந்த் (வயது 25) என்ற மகனும், ரக்ஷா (19) என்ற மகளும் இருந்தனர்.
இவர்களில் பிரசாந்த் என்ஜினீயர் ஆவார். மகள் ரக்ஷா, சேலம் அருகே கொங்குநாடு மகளிர் கலை கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் பட்டப்படிப்பு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாணவி ரக்ஷாவுக்கு அவருடைய தந்தை புதிதாக ‘ஆண்ட்ராய்டு’ செல்போன் ஒன்றை வாங்கி கொடுத்தார். அந்த செல்போனை மாணவி பயன்படுத்தி வந்தார்.
தூக்குப்போட்டு தற்கொலை
நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை ரக்ஷா செல்போனில் முகநூலில் (பேஸ்புக்) தோழிகளுடன் நீண்டநேரம் ‘சாட்’ செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்த ரக்ஷாவின் தந்தை கோவிந்தன், அவரை கண்டித்துள்ளார். இதனால் மாணவி மனவேதனை அடைந்துள்ளார். இதையடுத்து அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் அவர் அறையின் ஜன்னல் கம்பியில் சுடிதார் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனிடையே நேற்று காலை நீண்ட நேரமாகியும் தங்கள் மகள் கதவை திறக்காததால் தாழ்ப்பாளை உடைத்து அறைக்குள் சென்று பெற்றோர் பார்த்தனர். அங்கு மாணவி தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சோகம்
இது குறித்து தகவல் கிடைத்ததும், தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story