30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் பறந்து மோட்டார் சைக்கிளுடன் தண்டவாளத்தில் விழுந்த என்ஜினீயர் சாவு; நண்பர் படுகாயம்


30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் பறந்து மோட்டார் சைக்கிளுடன் தண்டவாளத்தில் விழுந்த என்ஜினீயர் சாவு; நண்பர் படுகாயம்
x
தினத்தந்தி 9 March 2020 3:30 AM IST (Updated: 9 March 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் 30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து அந்தரத்தில் பறந்த மோட்டார் சைக்கிள் தண்டவாளத்தில் விழுந்தது. இந்த கோர விபத்தில் என்ஜினீயர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.

சென்னை, 

சென்னை வில்லிவாக்கத்தை அடுத்த ராஜமங்கலத்தை சேர்ந்தவர் கிரிஸ்டோபர். இவரது மகன் லிவிங்ஸ்டன் டேனியல்(வயது 23). செம்மஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து முடித்துள்ளார். தற்போது வேலை தேடிக்கொண்டிருந்தார். இவரது நண்பர் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கோபிநாத் என்பவரின் மகன் கார்த்திக்(23). இவரும் அதே கல்லூரியில் படித்துவிட்டு, ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இவர்கள் இருவரும் நேற்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் புளியந்தோப்பு சென்றனர். அங்குள்ள ஒரு கடையில் பிரியாணி சாப்பிட்டு விட்டு மீண்டும் வண்ணாரப்பேட்டைக்கு அதிவேகமாக திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை லிவிங்ஸ்டன் ஓட்டினார். கார்த்திக் பின்னால் அமர்ந்திருந்தார்.

பேசின் பாலம் அருகில் வந்து கொண்டிருந்தபோது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சுமார் 30 அடி உயரம் உடைய அந்த பாலத்தின் ஓரம் இருந்த தடுப்புகளை இடித்து அந்தரத்தில் பறந்து கீழே பாய்ந்த மோட்டார் சைக்கிள் தண்டவாளத்தில் விழுந்தது.

சினிமாவை மிஞ்சும் வகையில் நடந்த இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய லிவிங்ஸ்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர் கார்த்திக் வலது கால் முறிந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.

அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் இந்த விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிய கார்த்திக்கை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் லிவிங்ஸ்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ஷியாமலா மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் மோசஸ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்து நடந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புவேலியை இடித்து கொண்டு கீழே விழுவதும், அதே நேரத்தில் அவர்கள் விழுந்த பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதும் பதிவாகியிருந்தது.

இதையடுத்து விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளை போலீசார் கிரேன் மூலம் மீட்டனர். விபத்து நடந்த பேசின் பாலத்தில் பக்கவாட்டு சுவர் அமைக்கும் பணி தற்போது நடந்த வருகிறது.

ஏற்கனவே யானை கவுனி பாலத்தில் வேலை நடந்த வருவதால், வாகன ஓட்டிகள் பேசின் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். பணி நடைபெறுவதால், அங்கு வெறும் தடுப்பு வேலிகள் மட்டும் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் தண்டவாள பகுதியில் கீழே உயர் அழுத்த மின் கம்பிகள் உள்ளன.

ரெயில்களும் சென்று வருகின்றன. எனவே இதுபோல் இனிமேல் ஏதும் விபத்துகள் ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பணிகள் முடியும் வரை பேசின் பாலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story