டெல்டா பகுதியில் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்


டெல்டா பகுதியில் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தொடங்க முடியாது - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி விளக்கம்
x
தினத்தந்தி 12 March 2020 12:15 AM GMT (Updated: 12 March 2020 12:05 AM GMT)

இனிமேல் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை டெல்டா பகுதியில் தொடங்க முடியாது என்றும், ஏற்கனவே உள்ள திட்டத்தை தடை செய்தால் கோர்ட்டுக்கு போவார்கள் என்றும் சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் வனம், சுற்றுச்சூழல் துறை மானிய கோரிக்கையில் தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி (திருமயம்) பங்கேற்று பேசினார். அப்போது, டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்தாலும், ஏற்கனவே இருக்கும் திட்டங்கள் மூலம் 700 கிணறுகள் தோண்டப்பட்டால் அங்கு நிலைமை என்னவாகும்? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:-

இனி தமிழகத்தில் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டம் எதுவுமே நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை. முழுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. ஆனால் இதுபற்றி தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன், நாடாளுமன்றத்தில் ஒரு சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார்.

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எங்களுடைய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சட்டசபையில் நான் அறிவித்தபோதே, “எந்த ஒரு திட்டத்தையும் மாநிலத்தின் எந்த பகுதியிலும் அனுமதிக்கவோ, ரத்து செய்யவோ முடிவெடுக்கும் உரிமை மாநில அரசுக்கே உள்ளது. மத்திய அரசு அதை தடுக்காது. மத்திய மந்திரியே கடிதம் மூலம் ஒப்புதல் வழங்கியுள்ளார்” என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

ஏற்கனவே மத்திய மந்திரியிடம் இருந்து ஒப்புதல் கடிதம் வாங்கியிருக்கிறோம். மத்திய அரசே ஒப்புதல் கொடுத்து கடிதம் அனுப்பிய பின்னரும், தி.மு.க. எம்.பி. இந்த பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் மாநில அரசு எவ்வாறு நடைமுறைப்படுத்த முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மத்திய அரசை மீறி மாநில அரசு எவ்வாறு செயல்பட முடியும் என்ற கேள்வியும் கேட்டிருக்கிறார்.

நாங்கள் சட்டமுன்வடிவை கொண்டு வந்து, முழுமையான பாதுகாப்போடு இந்த சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். அவரது அந்த கேள்வியை படிக்கும்போது, மாநில அரசின் உரிமை எது?, மத்திய அரசின் உரிமை எது? என்பது கூட தெரியாமல் எம்.பி. கேள்வி கேட்டு இருக்கிறார்.

தமிழக அரசு வேளாண் பெருமக்களின் நலனுக்காக இந்த சட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் தி.மு.க.வுக்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை என்பது தான் வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

முதன் முதலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது இவர்கள் (தி.மு.க.) தான். எங்கள் ஆட்சிக்காலத்தில் இல்லாத ஒரு ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிரான போராட்டங்களை அறிவித்ததும் இவர்கள்தான். ஆக, டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும்போதும், மத்தியில் கூட்டணியில் இருக்கும்போதும், எதுவும் செய்யாமல், தற்போது எங்கள் அரசு கொண்டு வந்த இந்த சட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

அதைத்தான் குழந்தையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டுவது என்பார்கள். ஆனால் இவர்களது நாடகம் தமிழ்நாட்டு மக்களிடம் ஒருபோதும் எடுபடாது.

மக்களுக்கு நன்மை பயக்கும் சட்டமாக இது இருப்பதால், இது செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், டெல்டா பகுதியில் இவர்களால் அரசியல் செய்ய முடியாது என்ற பயம் இருக்கிறது என்ற சந்தேகம் தான் எங்களுக்கு எழுகிறது.

இது மாநில அரசாங்கத்திற்கு உட்பட்ட சட்டம். மாநில அரசாங்கத்திற்கு உட்பட்ட சட்டத்தின் அடிப்படையிலே தான் சட்டமுன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம். இதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. இனி புதிதாக எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் தமிழகத்தில் அமல்படுத்த இயலாது, கொண்டுவரவும் இயலாது என்பதை உறுதிபட தெரிவித்து கொள்கிறேன்.

குறைகளே இல்லாமல் தெளிவாகத்தான் இந்த சட்டத்தை நாங்கள் இயற்றி இருக்கிறோம். உங்களுக்கு விருப்பம் இல்லாமல் இருக்கலாமே தவிர, சட்டத்தில் எந்தவித குளறுபடியும் இல்லை. நீங்கள் கொண்டு வந்ததை, இவர்கள் தடுக்கிறார்களே என்ற எண்ணம்தான் உங்கள் மனதில் இருக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகிறது.

இதை எப்படியாவது தடுக்க வேண்டும். இதற்கு ஒரு உள்நோக்கம் கொண்டு வந்து, அ.தி.மு.க. ஆட்சியிலே இந்த சட்டம் கொண்டு வரக் கூடாது என்ற எண்ணத்தில் நீங்கள் செயல்படும்போது நாங்கள் என்ன செய்ய முடியும்.

வேண்டுமென்றே திட்டமிட்டு, அங்கே இருக்கிற டெல்டா பாசன விவசாயிகளுக்கு இடையே குழப்பம் ஏற்படுத்துவதற்காக நீங்கள் அதை குறிப்பிட்டிருக்கிறீர்களே தவிர, இந்த சட்டத்தில் எந்த குறைபாடும் இல்லை என்பதை ஆணித்தரமாக தெரிவித்து கொள்கிறேன்.

டெல்டா பகுதியில் மாநில அரசாங்கம் அனுமதி கொடுத்தால் தான் எதையும் நிறைவேற்ற முடியும். அதற்கு தான் நாங்கள் சட்டமே கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம். ஆகவே அதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் தேவையில்லை.

இனி புதிதாக எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் கொண்டுவர முடியாது. மாநில அரசிற்கு தான் அதிகாரம் இருக்கிறது. அதை மத்திய மந்திரியும் கூறிவிட்டார். மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு பிரச்சினையை உருவாக்கி, நீங்கள் அரசியல் ஆதாயம் தேட முற்பட்டால் நிச்சயம் 100 சதவீதம் நிறைவேறாது. இவ்வாறு அவர் பதிலளித்தார்.

அதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் கேள்வி ஒன்றை எழுப்பினார். அவர், “இனி ஒரு புதிய திட்டம் எதையும் கொண்டுவர முடியாது என்பதையும், உங்கள் சட்டத்தையும் தி.மு.க. வரவேற்கிறது. ஆனால் ஏற்கனவே போய்க்கொண்டிருக்கிற திட்டங்களை செயல்படுத்தினால் அது பாது காப்பு மண்டலத்துக்குபாதிப்பை ஏற்படுத்தாதா? என்பதுதான் எங்களின் கேள்வி. எனவே நடைபெற்று கொண்டிருக்கும் திட்டங்களை ரத்து செய்ய முடியாதா? என்பதற்கு மட்டும் பதிலளித்தால் போதும்” என்று குறிப்பிட்டார்.

அதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அளித்த பதில் வருமாறு:-

அதை தடை செய்தால் அவர்கள் எங்கே போவார்கள்? என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இது மிக முக்கியமான பிரச்சினை. நீண்ட காலமாக விவசாயிகள் வைக்கும் கோரிக்கையை முதலில் நிறைவேற்றுவோம். வருகிறதை காப்போம். அதுதான் முதல் கடமை.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகு, யாரும் புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டுவர முடியாது, அனுமதி கொடுக்கவும் முடியாது. ஏற்கனவே இருப்பதை தடை செய்தால், உடனடியாக நீதிமன்றத்திற்கு போவார்கள். நீதிமன்றத்திற்கு போவது மட்டுமின்றி, அவர்கள் ஏற்கனவே முதலீடு செய்த செலவினங்கள் அத்தனையும் மாநில அரசுதான் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால், பல ஆயிரம் கோடி ரூபாயை அவர்கள் முதலீடு செய்திருக்கிறார்கள்.

எனவே அதில் என்னென்ன பிரச்சினை இருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். இந்த பிரச்சினைகளில் எல்லாம் உட்படக்கூடாது என்பதற்காகத்தான், இனி புதிதாக எந்தவொரு ஹைட்ரோ கார்பன் திட்டத்தையும் டெல்டா பகுதியில் ஆரம்பிக்க கூடாது என்பதற்காக இந்த சட்டமுன்வடிவை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறோம். இவ்வாறு அவர் பதிலளித்தார்.

Next Story