தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு


தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
x
தினத்தந்தி 13 March 2020 12:00 AM GMT (Updated: 12 March 2020 11:59 PM GMT)

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை, 

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் கொரோனா வைரஸ் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் கீழ் உறுப்பினர்கள் கே.ஆர்.ராமசாமி (காங்கிரஸ்), டாக்டர் பரமசிவம் (அ.தி.மு.க.), டாக்டர் சரவணன் (தி.மு.க.) ஆகியோர் பேசினர். அப்போது நடந்த விவாதம் வருமாறு:-

டாக்டர் பரமசிவம் (அ.தி. மு.க.):-கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்கள் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பரப்பப் படுகிறது. வைரலை விட, தவறான செய்திகள் தான் மக்களை அதிகமாக அச்சப் படுத்துகிறது. விலங்குகள் மூலம் பரவுவதாக தகவல் பரப்புகிறார்கள். இதுபோன்ற தவறான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

டாக்டர் சரவணன் (தி.மு.க.):-கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கையை தி.மு.க. செய்து கொண்டு இருக்கிறது. இதை எல்லோரும் செய்ய வேண்டும். மாஸ்க் விலையை குறைக்க வேண்டும். ரேஷன் கடைகளில் கூட மாஸ்க் விற்கலாம். மக்களிடம் தகுந்த அளவு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கே.ஆர்.ராமசாமி:-முக கவசம் என்று சொல்லப்படும் மாஸ்க் விலை அதிகரித்துள்ளது. அரசு மாஸ்க் பயன் படுத்த தேவையில்லை என்றாலும் கூட தற்காப்புக்கு மாஸ்க் பயன்படுத்த மக்கள் விரும்புகிறார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் வேகமாக செயல்படுகிறார். எனவே அவர் சீனா நாட்டிற்கு ஆலோசனை வழங்க வேண்டும்.

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர்:-சட்டசபை காங்கிரஸ் தலைவர் தற்போதுள்ள சூழ்நிலையை எடுத்துக் கூறி என்னை பாராட்டி ஊக்கப்படுத்தினார். நான் சீனாவிற்கு செல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார். பொதுவாக பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். வைரசை விட வதந்திகள் தான் வேகமாக பரவி வருகிறது. வதந்திகளை நம்பாதீர்கள்.

தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் இல்லை. மாஸ்க் பயன்படுத்த வேண்டிய நிலையும் இல்லை. 10 லட்சத்திற்கும் அதிகமான மாஸ்க்கள், கவசங்கள் இருப்பில் இருக்கிறது. தினமும் விமானம் மூலம் 8 ஆயிரத்து 500 பயணிகள் வருகிறார்கள். விமான நிலையத்திலேயே அவர்களை முழுமையாக பரிசோதனை செய்கிறோம். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு இருமல், சளி இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்து தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதுவரை 1 லட்சத்து 46 ஆயிரம் பயணிகளுக்கு பரிசோதனைகள் செய்திருக்கிறோம்.

புற்றுநோய், இருதய நோய் பாதிக்கப்பட்டவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் பாதுகாப்பு கருதி மாஸ்க் அணியலாம். 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணியலாம். சிறு குழந்தைகளையும் எச்சரிக்கையாக வைத்திருக்க வேண்டும்.

சீனாவில் 100 பேருக்கு இறப்பு விகிதம் 2.3 சதவீதம் உள்ளது. மற்ற நாடுகளில் 2 சதவீதம் தான் உள்ளது. எனவே 100 சதவீதம் கொரோனா வைரசை எதிர்கொள்ள முடியும். சினிமா தியேட்டர்கள், மால்கள், கடைகள் உள்ளிட்ட பொது இடங்களுக்கு சென்று விட்டு வீடு திரும்பியதும் நன்றாக சோப்பு போட்டு கை, கால்களை சுத்தம் செய்ய வேண்டும்.

லைசால் கிருமிநாசினியை பயன்படுத்தினாலே 100 சதவீதம் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். வெயில் அதிகமாக இருந்தால் கொரோனா வராது என்று சொல்ல முடியாது. வெளிநாட்டிலிருந்து வந்த காஞ்சீபுரத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்கு பிறகு அவர் நலம் பெற்று உள்ளார். ஓரிரு நாளில் அவர் வீடு திரும்புவார். சென்னை, தாம்பரம், மதுரை தோப்பூர், ஈரோடு பெருந்துறை, தஞ்சை செங்கிப்பட்டியில் கொரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. எனவே யாரும் பயப்பட தேவையில்லை.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன்:-வதந்தியை அரசு தான் பரப்புகிறது. போன் செய்தாலே கொரோனா விழிப்புணர்வு தான் வருகிறது. ஆனால், இங்கே நீங்கள் கொரோனா இல்லை, இல்லை என்று சொல்லுகிறீர்கள். வெளிநாட்டில் கொத்து, கொத்தா செத்துக்கொண்டு இருக்கிறார்கள். போப் ஆண்டவர் பிரார்த்தனை கூட்டத்தில் கூட யாரும் இல்லை. வாடிகன் நகர் வெறிச்சோடி இருக்கிறது. ஒவ்வொரு நாடுகளிலும் கொரோனாவால் இறக்கிறார்கள். எனவே ஒன்றும் இல்லை, ஒன்றும் இல்லை என்று எங்களை காலி செய்ய பார்க்கிறீர்களா? இங்கு இருப்பவர்களுக்கு ஏதாவது ஒன்று நடந்து இடைத்தேர்தல் வந்தால் யார் சந்திப்பது?. பயத்தால் நாங்கள் கை குட்டையை வாயில் பொத்திக் கொள்கிறோம்.

நீங்க வேற, கொரோனா இல்லை, இல்லை என்கிறீர்கள். முதலில் 3 டாக்டர்களை இங்கே பேச விட்டது தவறு. பார்வையாளர்களுக்கு கூட இங்கு அதிகளவில் அனுமதி அளிக்கிறீர்கள். ஏ.சி. அறையில் கூட்டமாக இருக்கும் இடத்தில் பாதிப்பு இருக்கும் என்கிறார்கள். இங்கும் அதிகமாக ஏ.சி. பயன்படுத்தப்படுகிறது. இங்கு இருப்பவர்கள் தும்மினாலே பயமாக இருக்கிறது. எனவே முதலில் இங்கு உள்ளவர்களுக்கு மாஸ்க் வழங்கி காப்பாற்றுங்கள் என்று தனக்கே உரிய நகைச்சுவையுடன் துரைமுருகன் பேசினார்.

(துரைமுருகன் இவ்வாறு பேசியதும் அவையில் சிரிப்பலை எழுந்தது)

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:-கொரோனா வைரஸ் பற்றிய சந்தேகங்கள் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் அமைச்சர் விளக்கமாக, பேசியிருக்கிறார். நீங்கள் அச்சப்பட வேண்டிய அவசியம் இல்லை.

70 வயதிற்கு மேலே பாதிப்புக்கு வாய்ப்பு என்று அமைச்சர் கூறியதால், அச்சப்படுகிறீர்களோ, என்னவோ, தெரியவில்லை. அந்த கவலையே வேண்டியதில்லை. நமது தமிழக சுகாதாரத் துறையை பொறுத்தவரைக்கும், நம்முடைய டாக்டர்கள் சிறப்பானவர்கள். ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்பது தெரிந்தவுடன் அவரை குணப்படுத்துகிற அளவிற்கு சிறப்பான சிகிச்சையை நம்முடைய டாக்டர்கள் அளித்திருக்கிறார்கள். அதனால் கவலைப்பட வேண்டிய அவசியமே கிடையாது.

ஆகவே, தமிழகத்தை பொறுத்தவரைக்கும் யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமே இல்லை.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் வருத்தப்பட தேவையில்லை, அச்சப்படவும் தேவையில்லை. உங்களுக்கு வயது அதிகமாக இருந்தாலும் கூட, அதற்கும் தகுந்த சிகிச்சை கொடுப்பதற்கு நம்முடைய டாக்டர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமினால் தான் இந்த பிரச்சினைக்கு உட்படுகிறார்கள். வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு தான் இந்த நோயே இருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கு யாருக்கும் கிடையாது. எனவே யாரும் அச்சப்பட தேவையில்லை.

சபாநாயகர் தனபால்:-சட்டசபைக்கு வரும் பார்வையாளர்களை கட்டுப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம். சட்டசபையில் ஏ.சி. அளவு குறைக்கப்பட்டுள்ளது. சட்டசபைக்குள் கொரோனா வைரஸ் தாக்கம் இல்லாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

Next Story