அடுத்த ஆண்டு சட்டசபையில் பா.ஜனதா பிரதான கட்சியாக அமரும் - மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை


அடுத்த ஆண்டு சட்டசபையில் பா.ஜனதா பிரதான கட்சியாக அமரும் - மாநில தலைவர் எல்.முருகன் நம்பிக்கை
x
தினத்தந்தி 13 March 2020 11:00 PM GMT (Updated: 13 March 2020 10:49 PM GMT)

அடுத்த ஆண்டு சட்டசபையில் பா.ஜனதா பிரதான கட்சியாக அமரும் என்று அக்கட்சியின் புதிய தலைவர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை, 

தமிழக பா.ஜனதா கட்சியின் புதிய தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். அவர் டெல்லியில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து வாழ்த்து பெற்றுவிட்டு நேற்று மாலை விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கிருந்து தியாகராயநகரில் உள்ள பா.ஜனதா தலைமை அலுவலகத்துக்கு ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மகளிரணியினர் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர். பின்னர் அவர் கட்சி அலுவலகத்தில் பா.ஜ.க. கொடியை ஏற்றிவைத்தார். அங்குள்ள பாரத மாதா சிலை, தமிழ்த்தாய் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து முறைப்படி மாநில தலைவர் பதவியை அவர் ஏற்றுக்கொண்டார். அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. இல.கணேசன், முன்னாள் அமைச்சர்கள் எச்.வி.ஹண்டே, நயினார் நாகேந்திரன், தேசிய செயலாளர் எச்.ராஜா, அமைப்பு செயலாளர் கேசவன் விநாயகம், பொதுச்செயலாளர்கள் வானதி சீனிவாசன், கரு.நாகராஜன், துணைத்தலைவர் எம்.என்.ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

பின்னர் எல்.முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு மாநில தலைவர் பதவியை வழங்கிய பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மூத்த தலைவர்கள் வழிகாட்டுதல்படி பா.ஜ.க.வை தமிழகத்தில் அடுத்தகட்டத்துக்கு எடுத்துச்செல்வேன்.

மோடியின் மீதான ஈர்ப்பில் படித்த இளைஞர்கள், திரையுலகினர், அதிகளவில் பா.ஜ.க.வில் இணைந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து கட்சியை வழிநடத்துவோம்.

தமிழகத்தில் பா.ஜ.க. நேர்மறையான அரசியலை முன்னெடுக்கும். நாங்கள் எதையும் சவாலாக எடுத்துக்கொள்ள மாட்டோம். எங்கள் இயக்கத்தை பலப்படுத்துவதே குறிக்கோள்.

மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம்தான் பெரிதும் பலன் அடைந்துள்ளது. அதனை மக்கள் மத்தியில் எடுத்துக்கூறுவோம். பா.ஜ.க. வில் எளிய தொண்டர்களும் பதவிக்கு வரமுடியும். கட்சியில் இளைஞர்களுக்கு அதிக பதவி வழங்கப்படும். ஏற்கனவே நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் நகராட்சி, மாநகராட்சி மற்றும் சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. அதிக அளவில் வெற்றி பெறும். அடுத்த ஆண்டு தமிழக சட்டசபையில் பா.ஜ.க. பிரதான கட்சியாக அமரும். இவ்வாறு அவர் கூறினார்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் மற்றும் ஏராளமான பா.ஜனதா நிர்வாகிகள் முருகனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story