எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளிவைப்பு - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளிவைப்பு - சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 22 March 2020 12:30 AM GMT (Updated: 21 March 2020 10:17 PM GMT)

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகம், புதுச்சேரியில் வருகிற 27-ந் தேதி தொடங்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்படுவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 2-ந் தேதி தொடங்கிய பிளஸ்-2 பொதுத் தேர்வு வருகிற 24-ந் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. இதேபோல், 4-ந் தேதி தொடங்கிய பிளஸ்-1 பொதுத் தேர்வு 26-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தள்ளிவைப்பு

எஸ்.எஸ்.எல்.சி. (10-ம் வகுப்பு) பொதுத் தேர்வு வருகிற 27-ந் தேதி தொடங்கி, ஏப்ரல் 13-ந் தேதி வரை நடைபெற இருந்தது. இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்து 45 ஆயிரத்து 6 பேர் எழுத இருந்தனர்.

இந்த நிலையில், 27-ந் தேதி தொடங்க இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தள்ளிவைக்கப் படுவதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்தார்.

சட்டசபையில் கோரிக்கை

இது தொடர்பாக, சட்ட சபையில் நேற்று நடைபெற்ற மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய அ.தி. மு.க. கூட்டணி (மனிதநேய ஜனநாயக கட்சி) உறுப்பினர் தமிமுன் அன்சாரி (நாகப்பட்டினம் தொகுதி), “கொரோனா நோய் அச்சுறுத்தல் இருந்து வருவதால், தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான தேர்வுகளை ரத்து செய்துவிட்டு, அனைவரும் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் என்றார்.

மேலும், தேவை ஏற்பட்டால், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இதற்கு பதில் அளித்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “உறுப்பினரின் கோரிக்கை முதல்-அமைச்சரின் கவனத்துக்கு எடுத்து செல்லப்படும். அவர் ஆராய்ந்து முடிவு செய்து அறிவிப்பார்” என்றார்.

அந்த நேரத்தில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவையில் இல்லை. சற்று நேரத்தில் அவைக்கு வந்த அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

15-ந் தேதி தொடங்கும்

கொரோனா வைரஸ் நோய் தொற்றினை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் 9 லட்சத்து 45 ஆயிரம் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வருகிற 27-ந் தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 13-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளிவைக்கப்படும். இத்தேர்வுகள் தமிழ் புத்தாண்டு தினத்துக்கு பிறகு, அதாவது 15-4-2020 அன்று தொடங்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன. 11-ம் வகுப்புக்கு வருகிற 23 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெற உள்ள பொதுத்தேர்வுகளும், 12-ம் வகுப்புக்கு 24-ந் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

டாக்டர் ராமதாஸ் வரவேற்பு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த அறிவிப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்று உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக, பா.ம.க. தெரிவித்த யோசனைப்படி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை தமிழக அரசு ஒத்திவைத்திருப்பது பாராட்டத்தக்கது என்றும், கூடுதலாக 9-ம் வகுப்பு வரை ஆண்டு தேர்வுகளை ரத்து செய்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.

இதேபோல், தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் பி.கே.இளமாறனும் முதல்- அமைச்சரின் அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்து உள்ளார்.


Next Story