கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது சபாநாயகர் அறிவிப்பு


கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது சபாநாயகர் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 March 2020 11:00 PM GMT (Updated: 21 March 2020 10:53 PM GMT)

தமிழக சட்டசபை கூட்டத் தொடர் 31-ந் தேதியுடன் முடிவடைவதாக சபாநாயகர் ப.தனபால் அறிவித்தார்.

சென்னை,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருந்து வரும் நிலையில், தமிழக சட்டசபை கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. இந்த நிலையில், நேற்று முன்தினம் சபாநாயகர் ப.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. ஆனால், இந்தக் கூட்டத்தில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

அதனைத் தொடர்ந்து, நேற்று மீண்டும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 31-ந் தேதியுடன் சட்டசபை கூட்டத்தை முடித்துக்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. நாளைமறுநாள்(செவ்வாய்க்கிழமை) முதல் காலை, மாலை என 2 வேளைகளில் கூட்டத்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நேற்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் முடிந்ததும், சட்டசபைக்கு வந்த சபாநாயகர் ப.தனபால் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-

துணை நிதிநிலை அறிக்கை

அலுவல் ஆய்வுக் குழு எனது தலைமையில் இன்று கூடியது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவிக்கிறேன். 22-ந் தேதி (இன்று) அரசு விடுமுறை ஆகும். 23-ந் தேதி (நாளை) 2020-2021-ம் ஆண்டின் முன்பண மானியக் கோரிக்கைகள் பேரவைமுன் வைக்கப்படும். 2019-2020-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கை பேரவைக்கு அளிக்கப்படும். மேலும், இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் கண்டுள்ள துணை மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு விவாதமின்றி நடைபெறும்.

2019- 2020-ம் ஆண்டுக்கான இறுதி துணை நிதிநிலை அறிக்கையில் கண்டுள்ள துணை மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்து, ஆய்வு செய்து, விவாதமின்றி நிறைவேற்றப்படும். 2020-2021-ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் மீது வாக்கெடுப்பு விவாதமின்றி நடைபெறும். மேலும், 2020-2021-ம் ஆண்டின் செலவினத்திற்கான முன்பண மானியக் கோரிக்கைகள் குறித்த நிதி ஒதுக்கச் சட்டமுன்வடிவு அறிமுகம் செய்து, ஆய்வு செய்து, விவாதமின்றி நிறைவேற்றப்படும்.

தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல், செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறும்.

தெலுங்கு வருட பிறப்பு

24-ந் தேதி முற்பகல் தொழில் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதமும், பிற்பகல் வணிக வரிகள், முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப் பதிவு, பால் வளத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறும்.

25-ந் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு அரசு விடுமுறை நாளாகும். 26-ந் தேதி முற்பகல் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதமும், பிற்பகல் இயக்கூர்திகள் குறித்த சட்டங்கள் - நிர்வாகம், போக்குவரத்து துறை மீதான மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறும்.

காவல் துறை மானியம்

27-ந் தேதி முற்பகல் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதமும், பிற்பகல் சுற்றுலா - கலை மற்றும் பண்பாடு, இந்து சமய அறநிலையத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறும்.

28-ந் தேதி முற்பகல் வேளாண்மைத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதமும், பிற்பகல் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, கதர், கிராமத் தொழில்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறும்.

29-ந் தேதி அரசு விடுமுறையாகும். 30-ந் தேதி முற்பகல் தகவல் தொழில் நுட்பவியல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர்தணிப்பு துறைகள் மீதான மானியக் கோரிக்கை விவாதமும், பிற்பகல் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி துறை மீதான மானியக் கோரிக்கை விவாதமும் நடைபெறும்.

நிதித் துறை

31-ந் தேதி முற்பகல் பொதுத் துறை, மாநில சட்டமன்றம், கவர்னர் மற்றும் அமைச்சரவை, நிதித் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுக்கால நம்மைகளும் தொடர்பான விவாதம் நடைபெறும். மேலும், அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். ஏனைய அரசினர் அலுவல்களும் நடைபெறும்.

பேரவை முற்பகலில் 10 மணிக்கும், பிற்பகலில் 5 மணிக்கும் கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story