ரூ.24 கோடியில் சிறுபான்மையினருக்கு கல்வி, சுகாதாரம், திறன் வளர்ப்பு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு


ரூ.24 கோடியில் சிறுபான்மையினருக்கு கல்வி, சுகாதாரம், திறன் வளர்ப்பு திட்டங்கள் - முதலமைச்சர் அறிவிப்பு
x
தினத்தந்தி 23 March 2020 9:30 PM GMT (Updated: 23 March 2020 9:16 PM GMT)

சிறுபான்மையினருக்கு ரூ.24 கோடியில் கல்வி, சுகாதாரம், திறன் வளர்ப்பு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சென்னை, 

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது:-

சட்டம் பயிலும் மாணவர்களின் நலன் கருதி, முற்றிலும் பழுதடைந்து உள்ள மதுரை அரசு சட்டக் கல்லூரியின் பழைய கட்டிடத்திற்கு பதிலாக, புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்கப்படும்.

41 ஆயிரத்து 133 அங்கன்வாடி மையங்களில் சிறிய கட்டட பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள ஒரு மையத்திற்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ.12 கோடியே 34 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு 2 இணை வண்ணச் சீருடைகள் வழங்கும் திட்டம் தற்போது 17 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மேலும் 8 மாவட்டங்களில், ரூ.8 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில், 3.23 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.

சென்னை மயிலாப்பூரில் ரூ.9 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் சமூக நல ஆணையரகத்துக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும்.

மன வளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதம், தசை சிதைவு நோய், பல்வகைக் குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடு உடைய ஆயிரம் பேருக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் தனியே ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்து சிகிச்சை அளிக்கப்படும்.

பாலியல் வன்கொடுமை மற்றும் இதர குற்றங்களால் பாதிக்கப்பட்டு, வாழ்ந்து வரும் மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரைந்து இழப்பீடு வழங்கிட ஏதுவாக, மாற்றுத் திறனாளி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான இழப்பீடு திட்டம்-2020-க்கான நிதியம், ரூ.5 கோடி வைப்பீட்டுடன் உருவாக்கப்படும்.

சிறுபான்மையினர் அதிகமாக வாழும் கூடலூர், மணமேல்குடி, திருவாடனை மற்றும் மண்டபம் ஆகிய 4 தாலுகாக்களிலும், வேலூர், பேரணாம்பட்டு, மேல்விஷாரம், ஆம்பூர், வாணியம்பாடி, திண்டுக்கல், பள்ளப்பட்டி, நாகப்பட்டினம், கீழக்கரை, தூத்துக்குடி, காயல்பட்டினம், கடையநல்லூர், தென்காசி, திருநெல்வேலி, கொல்லங்கோடு, நாகர்கோவில், குறிச்சி மற்றும் குனியமுத்தூர் ஆகிய 18 பகுதிகளிலும், சமுதாயக் கூடம் அமைத்தல், நவீன வசதிகளுடன் கூடிய வகுப்பறை கட்டுதல், புது அரசு மேல்நிலைப் பள்ளிகள் கட்டுதல், தொழிற் பயிற்சி நிலையம் அமைத்தல், வேலைக்குச் செல்லும் மகளிருக்கான விடுதிகள் கட்டுதல், மதராசா பள்ளிகளுக்கு இணைய வசதியுடன் கூடிய கணினிகள் வழங்குதல் போன்ற சிறுபான்மையினருக்கான கல்வி, சுகாதாரம் மற்றும் திறன் வளர்ப்பு திட்டங்கள் ரூ.24.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.

இத்துறையின் கீழ் இயங்கி வரும் 1,301 விடுதிகளுக்கு டி.டி.எச். இணைப்புடன் எல்.இ.டி. தொலைக்காட்சிப் பெட்டிகள், ரூ.5 கோடியே 39 ஆயிரம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ.900 லிருந்து ரூ.1,000 ஆகவும், கல்லூரி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ.1,000 லிருந்து ரூ.1,100 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இவ்வாறு முதல்-அமைச்சர் கூறினார்.

Next Story