தமிழகத்தில் தடையை மீறிய 1,252 பேர் மீது வழக்கு


தமிழகத்தில் தடையை மீறிய 1,252 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 26 March 2020 9:05 PM GMT (Updated: 2020-03-27T02:35:04+05:30)

தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை மீறியதாக 1,252 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.

சென்னை, 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தில் 144 தடை உத்தரவு பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் தேவை இல்லாமல் வீட்டைவிட்டு வெளியில் வாகனங்களில் வரக்கூடாது என்று போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். தடையை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தடையை மீறிய குற்றத்துக்காக நேற்று முன்தினம் மட்டும் தமிழகம் முழுவதும் 1,252 பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அதை மீறிய குற்றத்திற்காக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. வதந்தி பரப்பியவர்கள் மீதும் 16 வழக்குகள் பதிவாகி உள்ளது.

சென்னையில் மட்டும் நேற்று தடையை மீறியதற்காக 279 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட உத்தரவை மீறியதற்காக 3 பேர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.

119 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சென்னை நகரில் சங்கிலி பறிப்பு, செல்போன் பறிப்பு, திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்கள் நடக்கவில்லை என்றும், 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்படும் வரையில் போலீஸ் நிலையங்களில் புகார் மனுக்கள் மட்டும் பெறப்படும் என்றும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், கொலை உள்ளிட்ட பெரிய குற்றங்கள் நடந்தால் ஒழிய மற்ற சாதாரண கிரிமினல் குற்றங்கள் மீது கைது நடவடிக்கை இருக்காது என்றும் அவர்கள் கூறினர். தேவை இல்லாமல், விசாரணை என்ற பெயரில் யாரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரக்கூடாது என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

50 வயதுக்கு மேற்பட்ட போலீசாரை வீட்டில் ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவசர தேவை இருந்தால் மட்டும் அவர்கள் பணிக்கு அழைக்கப்படுவார்கள். நோய்வாய்ப்பட்ட போலீசாருக்கும் பணி எதுவும் கொடுக்கப்படவில்லை.

விடுமுறை கேட்கும் போலீசாருக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும், உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இரவுப்பணி செய்பவர்கள் மறுநாள் ஓய்வு எடுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story