தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் நாளை முதல் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு


தமிழகத்தில் 4 சிறப்பு ரெயில்கள் நாளை முதல் இயக்கம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x
தினத்தந்தி 30 May 2020 11:00 PM GMT (Updated: 30 May 2020 10:29 PM GMT)

தமிழகத்தில் நாளை(திங்கட்கிழமை) முதல் 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்போவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

கொரோனா மிரட்டலுக்கு இடையே ஊரடங்கு மெல்ல, மெல்ல தளர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி நாடு முழுவதும் 200 ஏ.சி. பெட்டிகள் இல்லாத ரெயில்கள் இயக்க முடிவு செய்தது. அந்த வகையில் தெற்கு ரெயில்வே சார்பில் தமிழகத்தில் 4 ரெயில்கள் மட்டும் இயக்க மாநில அரசிடன் ஒப்புதல் கேட்டு கடிதம் அனுப்பியது. இந்தநிலையில் மாநில அரசின் ஒப்புதலுடன் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் இருந்து 4 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நாளை (திங்கட்கிழமை) முதல் கீழ்க்கண்ட சிறப்பு ரெயில்கள் தமிழகத்தில் இயக்கப்பட உள்ளது

* கோவை-மயிலாடுதுறை ஜன் சதாப்தி சிறப்பு எக்ஸ்பிரஸ் (வண்டி எண்:02084) செவ்வாய்க்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் காலை 7.10 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1.40 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். இதைப்போல் மயிலாடுதுறை-கோவை ஜன் சதாப்தி சிறப்பு எக்ஸ்பிரஸ் (02083) செவ்வாய்க்கிழமைகளை தவிர்த்து மற்ற நாட்களில் மதியம் 2.50 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 9.15 மணிக்கு கோவை சென்றடையும்.

* கோவை-காட்பாடி ‘இன்டர்சிட்டி’ சிறப்பு எக்ஸ்பிரஸ்(02680), காலை 6.15 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, அன்று காலை 11.50 மணிக்கு காட்பாடி சென்றடையும். இதைப்போல் காட்பாடி-கோவை ‘இன்ட்டர்சிட்டி’ சிறப்பு எக்ஸ்பிரஸ்(02679) காட்பாடியில் இருந்து மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.15 மணிக்கு கோவை சென்றடையும்.

* மதுரை-விழுப்புரம் அதிவேக சிறப்பு ரெயில்(02636) காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 12.05 மணிக்கு விழுப்புரம் சென்றடையும். இதைப்போல் விழுப்புரம்-மதுரை அதிவேக சிறப்பு ரெயில்(02635) மாலை 4 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு, அன்று இரவு 9.20 மணிக்கு மதுரை சென்றடையும்.

* திருச்சி-நாகர்கோவில் அதிவேக சிறப்பு ரெயில்(02627), காலை 6 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு, அன்று மதியம் 1 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். இதைப்போல் நாகர்கோவில்-திருச்சி அதிவேக சிறப்பு ரெயில்(02628), நாகர்கோவிலில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு, அன்று இரவு 10.15 மணிக்கு திருச்சி சென்றடையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story