4 மாத அளவை மொத்தமாக கணக்கிட்டு வீடுகளுக்கு மின்சார கட்டணம் நிர்ணயிப்பதை எதிர்த்து வழக்கு


4 மாத அளவை மொத்தமாக கணக்கிட்டு வீடுகளுக்கு மின்சார கட்டணம் நிர்ணயிப்பதை எதிர்த்து வழக்கு
x
தினத்தந்தி 16 Jun 2020 4:30 AM IST (Updated: 16 Jun 2020 1:46 AM IST)
t-max-icont-min-icon

வீடுகளில் பயன்படுத்தப்பட்ட மின்சார அளவை 4 மாதங்களுக்கு மொத்தமாக கணக்கிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிற்கு பதில் அளிக்க மின்சாரம் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால், வீட்டு உபயோக மின் இணைப்புகளுக்கும், ஏனைய தாழ்வழுத்த மின் நுகர்வோரும் முந்தைய மாதத்தில் செலுத்திய கட்டணத்தையே தற்போதும் செலுத்த மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவுறுத்தியது. அதில், ஊரடங்கு தளர்த்திய பின்னர், எவ்வளவு மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கணக்கிட்டு, செலுத்திய தொகை போக மீதமுள்ள தொகை வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டது. தற்போது, 4 மாதங்களுக்கும் மொத்தமாக மின்சார நுகர்வை கணக்கீடு செய்வது, வழக்கமான தொகையை விட அதிக மின் கட்டணம் செலுத்தும் நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுமார் 1.93 கோடி மின் இணைப்புகள் கொண்ட வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் வழக்கமான கட்டணத்தில் 12 முதல் 50 சதவீதம் வரை கூடுதலாக செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஒரு வாரத்தில் பதில்

எனவே, 4 மாதம் பயன்படுத்திய மின்சாரத்தை மொத்தமாக கணக்கிடாமல், 2 மாதங்களாக பிரித்து கணக்கிட்டு, கட்டணத்தை நிர்ணயம் செய்ய உத்தரவிட வேண்டும். 4 மாதங்கள் பயன்படுத்திய மின்சார அளவை ஒன்றாக கணக்கிட வேண்டும் என்ற மின்சார வாரியத்தின் உத்தரவை ரத்து செய்யவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்‘ என்று உத்தரவிட்டனர்.

Next Story