ஒப்பந்தப்பணியில் முறைகேடு புகார் தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்க போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


ஒப்பந்தப்பணியில் முறைகேடு புகார் தி.மு.க. மனுவுக்கு பதில் அளிக்க போலீசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 16 Jun 2020 11:30 PM GMT (Updated: 16 Jun 2020 8:07 PM GMT)

இன்டர்நெட் இணைப்பு வழங்குவதற்காக வழித்தடம் அமைக்கும் ஒப்பந்தப்பணி ஒதுக்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படும் புகார் குறித்து தி.மு.க. தாக்கல் செய்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீசில் கொடுத்த புகார் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார்.

அதில், ‘மத்திய அரசின் ‘பாரத் நெட்’ திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் ‘இன்டர்நெட்’ இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 கிராமங்களுக்கு ஏரியல் வழித்தடம், பாதாள வழித்தடம் உள்ளிட்ட வழிகளில் இணைப்பு வழங்கும் திட்டத்திற்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் டெண்டர் கோரப்பட்டது. திட்டத்தின் மதிப்பீடு ரூ.1,950 கோடி என நிர்ணயிக்கப்பட்டது.

இந்த டெண்டரில் கலந்து கொண்ட பெரும்பாலான நிறுவனங்களை விலக்கிவிட்டு, குறிப்பிட்ட இரண்டு நிறுவனங்களுக்கு மட்டும் டெண்டர் வழங்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடு தொடர்பாக முதல்-அமைச்சர், துறை அமைச்சர் ஆகியோருக்கு எதிராக கடந்த மே 1-ந்தேதி புகார் செய்தும், இதுவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. எனவே வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்‘ என்று கூறியிருந்தார்.

மத்திய அரசிடம் புகார்

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில தலைமை அரசு குற்றவியல் வக்கீல் என்.நடராஜன் ஆஜராகி, ‘இந்த கேபிள் வழித்தடம் பதிக்கும் ஒப்பந்தம் தொடர்பான ‘இ-டெண்டர்’ கடந்த 12-ந்தேதி பிற்பகல் 3 மணியளவில் திறப்பதாக இருந்தது. ஆனால், இந்த டெண்டர் நடவடிக்கை முறையாக நடைபெறவில்லை என்று மத்திய அரசுக்கு அறப்போர் இயக்கம்புகார் அனுப்பியது. இதனால், டெண்டரை நிறுத்தும்படி கடந்த 12-ந்தேதி காலையில் உத்தரவு பிறப்பித்தது. இதனால் டெண்டர் ரத்து செய்யப்பட்டு விட்டது. நிலைமை இப்படி இருக்கும்போது, 2 நிறுவனங்களுக்கு ஒப்பந்த பணி வழங்கியதாக மனுதாரர் கற்பனையான முறையில் புகார் செய்துள்ளார். இதுதொடர்பான புகாரையும் முடித்து வைத்து போலீசார் அறிக்கை அனுப்பியுள்ளனர். ஆனால், அறிக்கை அனுப்பிய அடுத்த நாளே மனுதாரர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்யவேண்டும்‘ என்று வாதிட்டார்.

பதில் மனு

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி,

இந்த மனுவுக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு தள்ளிவைத்தார்.

Next Story