வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உரிய பரிசோதனை நடத்த வேண்டும்-எடப்பாடி பழனிசாமி


File Photo
x
File Photo
தினத்தந்தி 24 Jun 2020 9:00 PM GMT (Updated: 24 Jun 2020 9:00 PM GMT)

மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவலை தடுக்க வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உரிய பரிசோதனை நடத்தவேண்டும் என்று கூறினார்.

சென்னை, 

மாவட்ட கலெக்டர்கள் கூட்டத்தில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவலை தடுக்க வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உரிய பரிசோதனை நடத்தவேண்டும் என்று கூறினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, காணொலி காட்சி மூலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்து இருக்கிறோம். தமிழகம் முழுவதும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 75 ஆயிரம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. மாநகராட்சியும், சுகாதாரத்துறையும் இணைந்து சென்னையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

சென்னையில் பாதிக்கப்பட்டவர்களுக்காக சிகிச்சை அளிக்க 17 ஆயிரத்து 500 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதேபோல பரிசோதனைகளும் அதிகப்படுத்தப்பட்டு உள்ளன. சென்னையில் அதிக பரிசோதனைகள் செய்யப்டுகிறது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எல்லா வீடுகளிலும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு இருக்கிறது. நோய் அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொள்ளவேண்டும். 

வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உரிய பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படவேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும் தனிமைப்படுத்தப்படவேண்டும். கலெக்டர்கள் வேண்டுகோளின்படி டாக்டர்கள், செவிலியர்கள் போதுமான முழுமையான அளவு வழங்கப்படும்.

மாவட்ட நிர்வாகம் தரப்பில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கவேண்டும். அந்த பகுதியில் உள்ள கழிவறைகள் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியிலும் கிருமிநாசினி தெளிக்கவேண்டும்.

இ-பாஸ் மூலம் அனுமதி

வெளிநாடு, வெளிமாநிலம் மற்றும் மற்ற மாவட்டங்களில் இருந்து வருவதற்கு இ-பாஸ் மூலமாக அவர்களை அனுமதிக்கலாம். மருத்துவநிபுணர்கள், வல்லுநர்கள் சொல்லுகின்ற ஆலோசனையை பின்பற்றி தமிழக அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறது.

உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகம், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், நம்முடைய மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவிக்கின்ற கருத்து, வழிகாட்டுதலின் அடிப்படையில் கொரோனா தடுப்பு பணியை மேற்கொண்டுவருகிறோம். இந்த தொற்றைக் கண்டுபிடிக்கின்றபோது 80 சதவீத நபர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் இல்லை என்று டாக்டர்கள் தெரிவிக்கின்றார்கள். 20 சதவீதத்தில் 10 சதவீத நபர்களுக்கு அதிகமான அறிகுறி தென்படுவதாகவும், மீதியுள்ள 10 சதவீத நபர்களுக்கு ஒருசில அறிகுறிகளே தென்படுவதாகவும் டாக்டர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அதிக அளவில் பரிசோதனைகள் செய்து இருக்கிறது. இறப்பு விகிதமும் குறைவாக இருக்கின்றது.

பொதுமக்கள் வெளியே சென்றால் கண்டிப்பாக முககவசம் அணியவேண்டும். தயவு செய்து பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பொருட்களை வாங்கவேண்டும். வீட்டை விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டுக்கு வரும்போது கைகளை சோப்புப் போட்டு சுத்தமாக கழுவவேண்டும். இந்த அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றினாலே பாதி அளவுக்கு மேல், நோய்த்தொற்றை நாம் தடுக்க முடியும். இதை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.

தமிழக அரசை பொறுத்தவரைக்கும், அனைத்து வழிகளையும் அரசு பின்பற்றி நோய் பரவலை தடுப்பதற்கு கடும் முயற்சி எடுத்து வருகிறது. இருந் தாலும், பொதுமக்களுடைய முழு ஒத்துழைப்பு இருந்தால்தான் இந்த நோய்ப்பரவலை தடுக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story