தந்தை-மகன் கொலை வழக்கு: முக்கிய நபர்கள் அனைவரும் கைது- சிபிசிஐடி ஐஜி சங்கர்


தந்தை-மகன் கொலை வழக்கு:   முக்கிய  நபர்கள் அனைவரும் கைது- சிபிசிஐடி ஐஜி சங்கர்
x
தினத்தந்தி 2 July 2020 3:57 AM GMT (Updated: 2 July 2020 4:04 AM GMT)

சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய போலீசார் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரால் கைது செய்யப்பட்டு, கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் தொடர்பாக மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின் படி சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய 2 பேர் மீதும் தவறான வழக்குப்பதிவு செய்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மற்றும் தந்தை-மகனை போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், மகாராஜா உள்ளிட்ட 6 பேர் மீதும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்திய தண்டனை சட்டம் 302-வது பிரிவின்படி கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து,  நேற்று இரவு எஸ்.ஐ ரகுகணேஷ் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இன்று காலை மற்றொரு எஸ்.ஐ பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார். மேலும் 2 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். அதேபோல், சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதரும் இன்று காலை விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2 காவலர்கள், 2 எஸ்.ஐ.க்கள், ஒரு காவல் ஆய்வாளர் என 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் தொடர்புடைய முக்கிய போலீசார் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி ஐஜி சங்கர் தெரிவித்துள்ளார். 

Next Story