சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பு


சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பு
x
தினத்தந்தி 3 July 2020 5:58 AM GMT (Updated: 3 July 2020 5:58 AM GMT)

சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி,

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கை மீறி, தங்களது செல்போன் கடையை திறந்து வைத்து இருந்ததாக கூறி, சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்று தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த 2 பேரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.  

இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய மதுரை ஐகோர்ட்டு, இந்த சம்பவம் பற்றி கோவில்பட்டி முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. அதன்பேரில், மாஜிஸ்திரேட்டு பாரதிதாசன் கோவில்பட்டி கிளை சிறை மற்றும் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இதில் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் சம்பவத்தின்போது பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு ரேவதி, தந்தை-மகன் இருவரையும் போலீசார் விடிய, விடிய தாக்கியதாக சாட்சியம் அளித்தார்.


அதே நேரத்தில், விசாரணையின் போது போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று மாஜிஸ்திரேட்டு ஐகோர்ட்டில் புகார் அளித்தார். இதனால் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தை வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்ட ஐகோர்ட்டு, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்பேரில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு ஆவணங்களை பெற்றுக் கொண்டு தூத்துக்குடி சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் இரண்டு வழக்குகளை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் ஆகியோரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்துறை கட்டுப்பாட்டில் இருந்து   விடுவிக்கப்பட்டுள்ளது.  தடயவியல்துறையினர் ஆவணங்களை சேகரித்ததையடுத்து அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Next Story