பக்ரீத் பண்டிகையையொட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


பக்ரீத் பண்டிகையையொட்டி பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
x
தினத்தந்தி 30 July 2020 2:30 PM GMT (Updated: 30 July 2020 2:30 PM GMT)

கொரோனா தொற்று பரவி வருவதால் பக்ரீத் பண்டிகையின் போது, பொது இடங்களில் விலங்குகளை பலியிட அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

பக்ரீத் பண்டிகை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையின் போது இஸ்லாமியர்கள் தங்கள் இல்லங்களில் ஆடு, மாடு மற்றும் ஒட்டகம் ஆகிய விலங்குகளை பலியிடுவது வழக்கமாகும். அவ்வாறு பலியிடப்பட்ட விலங்குகளின் இறைச்சியை, மூன்று பங்குகளாக பிரித்து தங்கள் சுற்றத்தாருடன் பகிர்ந்து கொள்வது இந்த பண்டிகையின் சிறப்பாகும்.

இந்நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று பரவி வரும் வேளையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுமாறு மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. மராட்டிய மாநில அரசு இது குறித்து வெளியிட்ட அறிக்கையில் இஸ்லாமியர்கள் எளிமையான முறையில் பக்ரீத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.

இதற்கிடையில் சென்னை உயர்நீதிமன்றத்தில், மதுரை வட இந்தியர் சங்கத்தின் சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால், இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் விலங்குகளை பலியிட தடை விதிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது இடங்களில் விலங்குகள் கொல்வதற்கு தடை விதித்து கடந்த ஜூன் 20ம் தேதி மத்திய அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த மனு குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும் என, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் பக்ரீத் பண்டிகை நெருங்கி விட்டதையும், தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், பொது இடங்களில் விலங்குகள் பலியிட தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த அறிவிப்பை கண்டிப்புடன் அமல்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் உத்தரவிட்டனர்.

மேலும், மராட்டிய மாநில அரசு பிறப்பித்துள்ள விதிகளைப் போல், தமிழக அரசும் விதிகளை வெளியிட வேண்டும் எனவும், விலங்குகள் பலியிடுவது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவுகளையும், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற உத்தரவுகளையும் மாநில அரசு அமல்படுத்தும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் கருத்தான, விலங்குகளிடம் அன்பு செலுத்த வேண்டும் என்ற கருத்தை அரசியல் தலைவர்களும், மதத் தலைவர்களும் சமூக செயற்பாட்டாளர்களும் பிரச்சாரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், இந்த உத்தரவை அமல்படுத்தியது குறித்த விரிவான அறிக்கையை மூன்று வாரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

Next Story