புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு: பா.ஜனதாவுக்கு தாவலா...? குஷ்பூ காட்டமான பதில்


புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு: பா.ஜனதாவுக்கு தாவலா...? குஷ்பூ காட்டமான பதில்
x
தினத்தந்தி 31 July 2020 4:51 AM GMT (Updated: 31 July 2020 4:51 AM GMT)

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு, நடிகை குஷ்பூ ஆதரவு தெரிவித்துள்ளார் . இதுகுறித்து பா.ஜனதாவுக்கு தாவலா...? டுவிட்டரில் கேள்வி எழுப்பிய நிலையில் குஷ்பூ ஆவேசமாக பதில் அளித்து உள்ளார்.

சென்னை

34 ஆண்டுகளுக்கு பிறகு கல்விக் கொள்கையில், சில மாற்றங்களை செய்து  மத்திய அரசு புதிய தேசிய கல்விக் கொள்கை 2020 அறிவித்துள்ளது. தமிழகம் கடுமையாக எதிர்த்த மும்மொழிக் கொள்கை திட்டமும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்.பி. கனிமொழி, அன்புமணி எம்.பி. உள்ளிட்டோர் புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பூ, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். 

பாஜக-வின் புதிய கல்விக்கொள்கைக்கு, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பூ ஆதரவு தெரிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் குஷ்பூவின் டுவிட்டர் பக்கத்தில் குஷ்புவிடம் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதில் ஒருவர் திமுகவிலிருந்து காங்கிரஸ் அங்கிருந்து பாஜகவா? என கேள்வி எழுப்பியுள்ளார். பதிலளித்துள்ள குஷ்பு உங்களுக்கு எப்படி இவ்வளவு சின்ன புத்தியாக இருக்கிறது. கல்வி உங்களுக்கு ஏதாவது நல்லது செய்வதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஐயோ !! அது இது இல்லை. எனக்கூறியுள்ளார்.

மற்றொருவர் இருக்குற கட்சிக்கு உண்மையா இருப்பது இல்லை..இதனால் தான் கட்சி விட்டு கட்சி தாவி கொண்டு இருப்பது’’என அங்கலாய்த்து இருந்தார். அவர் கருணாநிதியின் படத்தை முகப்பு பக்கமாக வைத்திருந்தார். அதற்கு பதிலளித்துள்ள குஷ்பு, ஒரு சிறந்த மனிதரின் புகைப்படத்தை வைத்து அவரை அசிங்கப்படுத்தாதீர்கள்  எனத் தெரிவித்துள்ளார்.

Next Story