கொரோனா பாதிப்பு: கவர்னர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார்- மருத்துவமனை நிர்வாகம் தகவல்


கொரோனா பாதிப்பு:  கவர்னர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார்- மருத்துவமனை நிர்வாகம் தகவல்
x
தினத்தந்தி 5 Aug 2020 11:25 AM GMT (Updated: 5 Aug 2020 11:25 AM GMT)

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை: 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமைச்சர்கள்,  எம்.பிக்கள்,மற்றும் எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

சமீபத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கவர்னர் மாளிகையில் உள்ள ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டதில் 84 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன் 38 பேருக்கு பரிசோதனை செய்ததில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. கவர்னர் உதவியாளர் தாமசும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். 

இதையடுத்து கவர்னர் பன்வாரிலால் புரோகித்திற்கு மருத்துவர்கள் மேற்கொண்ட வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அவர் ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது. இருந்தபோதும் அவர் தன்னை 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதையடுத்து கவர்னர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டதாக கவர்னர் மாளிகை தெரிவித்தது. தனிமைப்படுத்துதலுக்கு பிறகு கவர்னர் பன்வாரிலால் புரோகித் மருத்துவ பரிசோதனைக்காக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு, பரிசோதனை மேற்கொண்டதில் கவர்னருக்கு பன்வாரிலாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கவர்னர் பன்வாரிலால் புரோகித் நலமுடன் உள்ளார் என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

அறிகுறிகள் இன்றி நலமுடன் இருக்கும் கவர்னர் மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story