ஜி.எஸ்.டி. வரி ரசீது போலியாக தயாரித்து ரூ.182 கோடி மோசடி-வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது


ஜி.எஸ்.டி. வரி ரசீது போலியாக தயாரித்து ரூ.182 கோடி மோசடி-வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2020 9:50 PM GMT (Updated: 10 Aug 2020 9:52 PM GMT)

ஜி.எஸ்.டி. வரிக்கான ரசீதுகளை போலியாக தயாரித்து ரூ.182 கோடி மோசடி செய்தது தொடர்பாக வங்கி அதிகாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, 


கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில், போலியாக ஜி.எஸ்.டி. வரி ரசீது மற்றும் மின்னணு ரசீதுகள் (இ-வே பில்) தயாரித்து மோசடியில் ஈடுபடுவோர் குறித்து, சரக்கு மற்றும் சேவை வரித்துறையின் மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.

இந்தநிலையில், தனியார் வங்கியின் முன்னாள் உதவி துணை தலைவர் ஏ.திவாகர் மற்றும் ஜான் லிவிங்ஸ்டன் ஆகியோர் இணைந்து ஜி.எஸ்.டி. வரிச்சலுகை பெறுவதற்காக, போலி நிறுவனங்களை உருவாக்கி அதன் பெயரில், ரசீதுகள் தயாரித்து வழங்கி உள்ளனர். இதற்காக தொடர்பில்லாத பல்வேறு நபர்களின் பான் கார்டுகளை பயன்படுத்தி, ஜி.எஸ்.டி. எண் பெற்றுள்ளனர்.

உண்மையான பொருட்களை வினியோகம் செய்யாமல், போலி ரசீது தயாரித்து, உள்ளட்டு வரி சலுகை பெற முயற்சித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்களின் வீடு, அலுவலகம் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில், ஏராளமான ஆவணங்கள் சிக்கி உள்ளன. அவர்களிடம் நடத்திய விசாரணையில் போலியாக 20 நிறுவனங்களை உருவாக்கியதும், அதன் வாயிலாக 315 போலி நிறுவனங்களுக்கு, விற்பனை செய்ததற்கான போலி ரசீதுகள் தயாரித்ததும் தெரியவந்துள்ளது.

இதன்மூலம் ரூ.182 கோடிக்கு போலி ரசீதுகள் உருவாக்கப்பட்டு ரூ.33 கோடிக்கு உள்ளட்டு வரிச்சலுகை பெற்றதும் தெரியவந்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக திவாகர் மற்றும் ஜான் லிவிங்ஸ்டன் ஆகியோர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Next Story