கடந்த ஆண்டின் முதல் காலாண்டை விட நடப்பு காலாண்டில் மொத்த வருவாய் 8 சதவீதம் வளர்ச்சி - இந்தியன் வங்கி தகவல்


கடந்த ஆண்டின் முதல் காலாண்டை விட நடப்பு காலாண்டில் மொத்த வருவாய் 8 சதவீதம் வளர்ச்சி - இந்தியன் வங்கி தகவல்
x
தினத்தந்தி 15 Aug 2020 11:31 PM GMT (Updated: 2020-08-16T05:01:51+05:30)

கடந்த ஆண்டின் முதல் காலாண்டை விட, நடப்பு காலாண்டில் மொத்த வருவாய் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதாக இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

சென்னை, 

கடந்த ஆண்டின் (2019-2020) முதல் காலாண்டைவிட நடப்பு முதல் காலாண்டில் (2020-2021) மொத்த வருவாய் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்று இந்தியன் வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியன் வங்கி, அலகாபாத் வங்கி இணைந்த பிறகு வரும் முதல் காலாண்டு பொருளாதார நிலை வெளியிடப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்தியன் வங்கி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நடப்பு முதல் காலாண்டின் (2020-2021) மொத்த வருவாய் ரூ.11 ஆயிரத்து 447 கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் (2019-2020) முதல் காலாண்டைவிட 8 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டின் முதல் காலாண்டு மொத்த வருவாய் ரூ.10 ஆயிரத்து 580 கோடி ஆகும். நிகர வட்டி வருவாயிலும் வளர்ச்சி கண்டு இருக்கிறது. நடப்பு முதல் காலாண்டில் ரூ.3 ஆயிரத்து 874 கோடியாக இருந்த நிகர வட்டி வருவாய், கடந்த ஆண்டின் முதல் காலாண்டைவிட 17 சதவீதம் வளர்ச்சி ஆகும்.

இதேபோல், இதர வருவாயும் கடந்த ஆண்டின் முதல் காலாண்டைவிட 19 சதவீதம் உயர்ந்துள்ளது. மேலும் இயக்க லாபமும் 23 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. நிகர லாபம் ரூ.492 கோடியாக (ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புக்கு) இருந்தது. செலவுக்கும், வருவாய்க்கும் இடையேயான விகிதம் கடந்த ஆண்டின் முதல் காலாண்டில் 49.63 சதவீதமாக இருந்தது. அது தற்போதைய நடப்பு காலாண்டில் 47.06 சதவீதமாக முன்னேற்றம் கண்டிருக்கிறது.

உலகளாவிய வர்த்தகம் 7 சதவீதம் அதிகரித்து, ரூ.8 லட்சத்து 55 ஆயிரத்து 895 கோடியாகவும், உலகளாவிய டெபாசிட்டுகள் ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 109 கோடியாகவும், உலகளாவிய கடன் தொகை ரூ.3 லட்சத்து 66 ஆயிரத்து 787 கோடியாகவும் இருந்தது. நடப்பு கணக்குகளை பொறுத்தவரையில் 7 சதவீதமும், சேமிப்பு கணக்குகளை பொறுத்தவரையில் 12 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

மொத்த வராக்கடன்கள், நிகர வராக்கடன்களிலும் முன்னேற்றம் கண்டு இருக்கிறது. ஜூன் 2019-ல் மொத்த வராக்கடன் 12.09 சதவீதமாக இருந்தநிலையில், தற்போது 10.90 சதவீதமாக உள்ளது. அதேபோல், நிகர வராக்கடன்களை பொறுத்தவரையில் ஜூன் 2019-ல் 4.08 சதவீதம் என்பதைவிட 3.76 சதவீதமாக இருக்கிறது. ஒதுக்கீடுகளின் பரவல் விகிதம் 74.35 சதவீதம் என்று இருந்ததைவிட 80.52 சதவீதமாக முன்னேற்றம் கண்டிருக்கிறது. கடன் வழங்குதலுக்கான செலவீனங்கள் 1.84 சதவீதமாக இருந்தது. இது இப்போது 1.93 சதவீதமாக உள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுகுறித்து இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் நிர்வாகியுமான பத்மஜா சுந்துரு கூறுகையில், ‘வங்கி இணைப்புக்கு பிறகு, நிறைவுற்ற முதல் காலாண்டின் முடிவுகளை பார்க்கும்போது, இது மிகவும் நம்பிக்கை அளிக்கும் செயலாக்கமாகவே இருக்கிறது. வருவாய், செலவுகளை கட்டுக்குள் கொண்டுவருதல், லாபகரத்தன்மை போன்ற முக்கிய அம்சங்களை பார்க்கும்போதும், சொத்துகளின் தரமும் முன்னேற்றம் அடைந்துள்ளது. வங்கி ஒருங்கிணைப்பு சரியான பாதை யில் பயணிக்கிறது’ என்றார்.


Next Story