தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் - தொண்டர்கள் மத்தியில் எல்.முருகன் பேச்சு


தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் - தொண்டர்கள் மத்தியில் எல்.முருகன் பேச்சு
x
தினத்தந்தி 16 Aug 2020 9:45 PM GMT (Updated: 16 Aug 2020 8:12 PM GMT)

தமிழக அரசியலில் 6 மாதத்திற்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட போகிறது என்று எல்.முருகன் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

சென்னை, 

தமிழக பா.ஜ.க. மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று காணொலி காட்சி வழியாக நடந்தது. இந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கி மாநிலத்தலைவர் எல்.முருகன் பேசியதாவது:-

பிரதமர் மோடி கரங்களை பலப்படுத்த தமிழகத்தில் பா.ஜ.க.வை வலிமையான கட்சியாக மாற்ற வேண்டும். இதற்காக நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கிறது. ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், நாம் கை காட்டுபவர்கள்தான் 2021-ல் தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமரப்போகிறார்கள்.

தமிழக அரசியலில் 6 மாதத்திற்குள் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட போகிறது. பா.ஜ.க. நிர்வாகிகளின் எண்ணம், செயல்பாடு மற்றும் நோக்கம் அனைத்தும் தேர்தலில் வெற்றி பெறுவதிலேயே இருக்க வேண்டும். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்து சட்டசபைக்கு அனுப்பும் வகையில் உங்கள் பணி இருக்க வேண்டும். பா.ஜ.க. வேட்பாளரை வெற்றி பெறச் செய்து சட்டசபைக்கு அனுப்பும் மாவட்ட தலைவருக்கு இனோவா கார் பரிசளிக்கப்படும்.

பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெற்றால் தமிழகத்தில் அமைய இருக்கும் புதிய ஆட்சியில் நமக்கு முக்கியமான பங்கு இருக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

2021 சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கணிசமான இடங்களில் வெற்றி பெறும். எங்கள் வேட்பாளர்கள் எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்று சட்டசபையில் இருப்பார்கள். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி தொடருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்துக்கு மாநில தலைவர் எல்.முருகன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.


Next Story