டாக்டர் இடமாற்றம் தொடர்பான வழக்கில் மருத்துவ கல்வி இயக்குனர் காணொலி காட்சி மூலம் ஆஜராக வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


டாக்டர் இடமாற்றம் தொடர்பான வழக்கில் மருத்துவ கல்வி இயக்குனர் காணொலி காட்சி மூலம் ஆஜராக வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 29 Aug 2020 10:43 PM GMT (Updated: 29 Aug 2020 10:43 PM GMT)

டாக்டர் இடமாற்றம் தொடர்பான வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யாத மருத்துவ கல்வி இயக்குனர் காணொலி காட்சி வாயிலாக ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு டாக்டர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர் அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் காரணமாக போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து, இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 118 டாக்டர்கள் நீண்ட தூரத்துக்கு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்த டாக்டர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்காக குற்றச்சாட்டு குறிப்பாணையும் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் அரசு டாக்டர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, குற்றச்சாட்டு குறிப்பாணைக்கு தடை விதித்தது. ஆனால், இடமாற்றம் செய்யப்பட்ட இடத்தில் பதவி ஏற்கும்படி டாக்டர்களுக்கு உத்தரவிட்டது. இதன்பின்னர், போராட்டம் செய்ததற்காக டாக்டர்களை அரசு பழி வாங்கக்கூடாது என்று ஐகோர்ட்டு தெரிவித்த கருத்தின் அடிப்படையில், இடமாறுதல் செய்யப்பட்ட அரசு டாக்டர்கள் பலர் மீண்டும் பழைய இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில், டாக்டர் செய்து தாஹீர் ஹூசைன் என்பவர் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில், “மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மயக்கவியல் நிபுணராக பணிபுரிந்து வந்த என்னை திருவண்ணாமலை மாவட்டத்துக்கு அரசு இடமாற்றம் செய்தது. 8 மாதங்களுக்குப்பிறகு மீண்டும் மதுரைக்கே பணியிட மாறுதல் செய்யப்பட்டேன். ஆனால், மூத்த மயக்கவியல் நிபுணரான என்னை ஜூனியர்களுடன் சேர்ந்து பணிபுரியும் வகையில் அவசர சிகிச்சை பிரிவில் பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், “இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யாமல் தொடர்ந்து காலதாமதம் செய்வது ஏன்? என புரியவில்லை. எனவே, மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு வருகிற செப்டம்பர் 4-ந்தேதி காணொலி காட்சி மூலம் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

Next Story