ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை


ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட கோரி வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
x
தினத்தந்தி 30 Sep 2020 1:38 AM GMT (Updated: 30 Sep 2020 1:38 AM GMT)

தமிழகத்துக்கான ரூ.12,250 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையை வழங்க உத்தரவிட கோரிய வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை, 

தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையான ரூ.12,250.50 கோடியை உடனடியாக மத்திய அரசு வழங்க உத்தரவிட கோரி தொடரப்பட்ட பொதுநல மனு சென்னை ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சென்னை ஐகோர்ட்டில், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் ஜி.சுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்தி நேரடியாக வரி வசூலிக்கும்போது, அதனால் மாநில அரசுகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய ஜி.எஸ்.டி. இழப்பீடு சட்டத்தை இயற்றியது. அதாவது 5 ஆண்டுகளுக்கு மாநில அரசுகளின் வருவாய் இழப்பை சரி செய்யும் விதமாக இந்த இழப்பீட்டை மத்திய அரசு வழங்கும். இந்த சட்டத்தின் பிரிவு 7(2)-ன்படி, 2 மாதங்களுக்கு ஒரு முறை வருவாய் இழப்பை கணக்கிட்டு மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும். நிதியாண்டு இறுதியில், மொத்தமாக வருவாய் மற்றும் வருவாய் இழப்பை கணக்கிட்டு, இழப்பீடு தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும்.

ஆனால், கடந்த ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஆகஸ்டு 31-ந்தேதி வரை தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய ரூ.12,250.50 கோடியை இதுவரை மத்திய அரசு வழங்கவில்லை.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆகஸ்டு 31-ந்தேதி கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசு ஜி.எஸ்.டி. இழப்பீடு சட்டப்பிரிவு 7(2)-ன்படி செயல்படுவது இல்லை. இவ்வாறு பெரும் தொகையை மத்திய அரசு கொடுக்காமல் இருப்பது, தமிழக மக்களின் அடிப்படை உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் விதமாக உள்ளது. அதாவது இந்த ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையை, ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு, மே 31-ந்தேதி அன்றும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு ஜூலை 31-ந்தேதி அன்றும் வழங்க வேண்டும். ஆனால், இந்த தொகையை சட்டப்படி மத்திய அரசு வழங்காதது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது ஆகும். எனவே, ஜி.எஸ்.டி. இழப்பீட்டு தொகையான ரூ.12,250.50 கோடியை உடனடியாக வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Next Story