அரசு கொறடா ராஜேந்திரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு


அரசு கொறடா ராஜேந்திரன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன்  சந்திப்பு
x

அதிமுகவில் நாளை முதல் அமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசு கொறாடா ராஜேந்திரன் இன்று முதல்வரை சந்தித்துப் பேசினார்.

சென்னை,

சமீபத்தில் அ.தி.மு.க.வில் உயர்மட்ட குழு கூட்டமும், செயற்குழு கூட்டமும் நடந்தது. செயற்குழு கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பில், முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை உடனே அறிவிக்க வேண்டும், அதுவும் எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்க சில அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்தார்கள். 

ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், முதல்- அமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதற்கு முன்பாக, பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை முதலில் அமைக்க வலியுறுத்தப்பட்டது.

இதனால், இருதரப்பிலும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சில மூத்த தலைவர்கள் அங்குள்ள அறையில் அமர்ந்து பேசினார்கள்.

அதன்பின்னர், வெளியே வந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, வரும் 7-ந் தேதி (அதாவது நாளை) முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து, முதல்- அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதை அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.  இந்த அறிவிப்பின் அடிப்படையில், நாளை அ.தி.மு.க.வில் முதல்- அமைச்சர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியாகுமா? என்று அக்கட்சி தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

இந்த பரபரப்பான சூழலில், அரசு கொறாடா ராஜேந்திரன் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார்.  நாளை அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முதல் அமைச்சருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வத்தை கேபி முனுசாமி இன்று சந்தித்துப்பேசினார்.   துணை முதலமைச்சர் உடனான ஆலோசனையில் மனோஜ் பாண்டியனும் பங்கேற்றார். அதிமுகவில் நடைபெற்றும் வரும் அடுத்தடுத்த நகர்வுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு வருகிறது. 


Next Story