விவசாய சங்க பிரதிநிதிகளுடன், நிர்மலா சீதாராமன் சந்திப்பு; வேளாண் மசோதாக்கள் குறித்து விளக்கம்


விவசாய சங்க பிரதிநிதிகளுடன், நிர்மலா சீதாராமன் சந்திப்பு; வேளாண் மசோதாக்கள் குறித்து விளக்கம்
x
தினத்தந்தி 6 Oct 2020 9:15 PM GMT (Updated: 6 Oct 2020 7:38 PM GMT)

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் நிர்மலா சீதாராமன் நேற்று சந்தித்து பேசினார். அப்போது வேளாண் மசோதாக்கள் குறித்து விளக்கம் அளித்தார்.

சென்னை,

தமிழக பா.ஜ.க. விவசாய அணி சார்பில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் தொடர்பாக விவசாய சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் உடனான கலந்துரையாடல் மற்றும் விளக்க கூட்டம் சென்னை மயிலாப்பூரில் உள்ள ஓட்டலில் நேற்று நடந்தது.

கூட்டத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் தலைமை தாங்கினார். பா.ஜ.க. விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் முன்னிலை வகித்தார். இதில் 45 விவசாய சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் மத்தியில் வேளாண் மசோதாக்களை விளக்கி மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகள் தங்களுடைய விளைபொருட்களை விற்கும்போது சந்தை வரி, நடுவர் வரி என 8½ சதவீதம் வரி செலுத்தும் நிலை இருந்து வந்தது. இதனால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. விவசாயிகளுக்கு உரிமைகள் வழங்கப்படவேண்டும், உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கவேண்டும் என்பதற்காகதான் வேளாண் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக தங்களுடைய விலை பொருட்களை ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு கொண்டு போய் விவசாயிகள் விற்கலாம். எந்த வரியும் செலுத்த தேவையில்லை.

பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் கூறியது தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. விவசாயிகள் நலனுக்காக இந்த சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் குழப்பப் பார்க்கிறார்கள். 2019-ம் ஆண்டு காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இதை போட்டார்கள். அதனை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். மோடி செய்து விட்டார் என்பதற்காக போராடி வருகிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்தால் நிச்சயம் கேள்வி கேட்கவேண்டும். குறையை சொல்லாமல் காகிதத்தை கிழித்து போடுவது தான் காங்கிரசின் வழக்கமாக உள்ளது.

விவசாயிகளுக்கு இந்த சட்டத்தால் நல்லது இல்லை என்று சொல்வது விவசாயிகளுக்காக அல்ல. விவசாயிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும். இடைத்தரகர்களுக்கு ஆதரவாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான். இடைத்தரகர்கள் மூலம் சம்பாதித்தவர்கள் ஆதாயத்துக்காக போராடுகிறார்கள். வேளாண் மசோதாக்களுக்கு எதிராக விவசாயிகள் போராடவில்லை. அவர்களுக்கு நாங்கள் பதில் சொல்கிறோம். முன்னொன்றும், பின்னொன்றும் பேசும் கட்சிகளை விவசாயிகள் நம்பவேண்டாம்.

காங்கிரஸ் ஆட்சியில் கோதுமை, நெல்லுக்கு மட்டும் தான் குறைந்த பட்ச ஆதார விலை கொடுக்கப்பட்டது. பருப்பு, எள், கடலை போன்ற பயிர்களை விவசாயம் செய்தவர்கள் கோதுமை, நெல்லை விவசாயம் செய்ய தொடங்கினார்கள். இதனால், தட்டுப்பாடு ஏற்பட்டு பருப்பு, எண்ணெய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. பா.ஜ.க. ஆட்சியில் ராகி, கோதுமை, கம்பு உள்ளிட்ட 23 பொருட்களுக்கு குறைந்தப்பட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது இதர விவசாயிகள் பயன்பெறுவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

வேளாண் சட்டத்தால் அரசு கொள்முதலும் நடக்கும். ரேஷன் பொருட்களும் மக்களுக்கு கிடைக்கும். எனவே, விவசாயிகளுக்கு நலனுக்காகவே திருத்தங்களை பா.ஜ.க. அரசு கொண்டுவந்துள்ளது. எனவே எதிர்க்கட்சிகள் சொல்வதை விவசாயிகள் நம்பவேண்டாம். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வேளாண் மசோதாக்கள் தூக்கி வீசப்படும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதன் மூலம் அவர் நாடாளுமன்றத்தை அவமதித்துள்ளார். விவசாயிகள் உதவி திட்டத்தில் தமிழகத்தில் நடந்துள்ள முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. முறைகேடாக உதவி திட்டத்தில் பயன்பெற்றவர்களிடம் இருந்து பணம் திரும்பப்பெறப்படும்.  இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Next Story