காவல் மரணத்தில் இளைஞர் ரமேஷ் உயிரிழந்த வழக்கு: முழு உடற்கூராய்வையும் ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை? - நீதிமன்றம் கேள்வி


காவல் மரணத்தில் இளைஞர் ரமேஷ் உயிரிழந்த வழக்கு: முழு உடற்கூராய்வையும் ஏன் வீடியோ பதிவு செய்யவில்லை? - நீதிமன்றம் கேள்வி
x
தினத்தந்தி 8 Oct 2020 11:20 AM GMT (Updated: 8 Oct 2020 11:20 AM GMT)

காவல்நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த இளைஞர் ரமேஷின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை பேரையூரைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது;-

“எனது சகோதரர் இதயக்கனி, புனிதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக புனிதாவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து எங்களை பல முறை விசாரணைக்கு அழைத்துச் சென்று மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி எனது இளைய சகோதரர் ரமேஷ் என்பவரை, காவல் சார்பு ஆய்வாளர் ஜெயக்கண்ணன் மற்றும் காவலர் புதியராஜா ஆகியோர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணை முடிந்து ரமேஷ் இரவு வீடு திரும்பிவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், வீட்டில் இருந்து சுமார் 300 அடி தொலைவில் உள்ள ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ரமேஷின் உடல் மீட்கப்பட்டது.

எனது சகோதரர் ரமேஷின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. அவரது உடலை உடற்கூராய்வு செய்த போது முழு வீடியோ பதிவு செய்யப்படவில்லை. எனவே ரமேஷ் உடலை தனிக்குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், “சட்டவிரோத காவல் மரணம் என புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏன் இந்த மரணத்தை சாதாரணமாக நினைத்திருக்கிறார்கள்? தடய அறிவியல் நிபுணர்கள் அல்லாமல் சாதாரண மருத்துவர்களை வைத்து ஏன் உடற்கூராய்வு செய்திருக்கிறார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கூட கொண்டு செல்லாமல், உசிலம்பட்டி மருத்துவமனையில் வைத்தே உடற்கூராய்வு செய்தது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி சுவாமிநாதன், இளைஞர் ரமேஷ் உடலை நெல்லை மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் எனவும் அதனை வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

Next Story