நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற கூறுவது ஏன் ? - சென்னை உயர்நீதிமன்றம்


நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற கூறுவது ஏன் ? - சென்னை உயர்நீதிமன்றம்
x
தினத்தந்தி 2 Nov 2020 5:53 PM IST (Updated: 2 Nov 2020 5:53 PM IST)
t-max-icont-min-icon

நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற கூறுவது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை,

கடந்த 2017-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட, மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது. இந்த தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் ஆபரணங்கள் அணிய கூடாது. பர்ஸ் மற்றும் கை கடிகாரம் போன்றவற்றை உபயோகப்படுத்தக் கூடாது என கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுகிறது.

இந்த கட்டுப்பாடுகளால் பல்வேறு மாணவ, மாணவிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவதாக, சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் அரவிந்த்ராஜ் என்பவர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள மனுவில், திருமணமான பெண்கள் புனிதமாக கருத கூடிய தாலி, மெட்டி, மூக்குத்தி போன்ற ஆபரணங்களை கழற்ற சொல்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
அதுபோன்று தேர்வறையில், கண்காணிப்பாளர்கள், கண்காணிப்பு கேமரா என இருக்கும் நிலையில், ஆபரணங்களை அகற்ற சொல்வது சட்டவிரோதமானது என்றும், அதனால், இந்த நிபந்தனைகள் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும் என்றும், ஆபரணங்களை அகற்றுமாறு மாணவிகளை நிர்பந்திக்க கூடாது என உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கானது நீதிபதி சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நீட் தேர்வில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளிடம் ஆபரணங்களை அகற்ற கூறுவது ஏன் என்று கேள்வி எழுப்பினர். 

மேலும் இது தொடர்பாக மத்திய அரசு  மற்றும் தேசிய தேர்வு முகமை நான்கு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.

Next Story