நாடு முழுவதும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க எந்த தடையும் விதிக்கக்கூடாது - சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்


நாடு முழுவதும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க எந்த தடையும் விதிக்கக்கூடாது - சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 8 Nov 2020 12:32 PM GMT (Updated: 8 Nov 2020 12:32 PM GMT)

நாடு முழுவதும் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிவகாசி, 

தீபாவளி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்துக்காக குட்டி ஜப்பான் என அழைக்கப்படும் சிவகாசியில் இருந்து ஆண்டுதோறும் ரூ.3 ஆயிரம் கோடிக்கு பட்டாசுகள் உற்பத்தி செய்யப்பட்டு, இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு தீபாவளியின் போது பசுமை பட்டாசுகள்தான் ந்தயாரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பசுமை பட்டாசுகள் இந்த ஆண்டு தீபாவளிக்காக தயாரிக்கப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக 6 மாதங்கள் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில் 50 சதவீத பட்டாசுகள் மட்டும் இந்த ஆண்டு தீபாவளிக்காக தயாரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது.

தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரம் மட்டும் உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து சில மாநிலங்களில் பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டு அந்தந்த மாநில அரசுகள் அறிவிப்பு செய்து வருகிறது. ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் தற்போது பட்டாசு வெடிக்க தடை விதித்துள்ளன. இந்த மாநிலங்களுக்கு தேவையான சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் சிவகாசியில் இருந்து தயாரித்து அந்தந்த பகுதிக்கு சென்று விட்டது. இந்த திடீர் தடையால் தற்போது சிவகாசியில் இருந்து சென்ற பட்டாசுகள் அங்கு விற்பனை செய்யமுடியாமல் கிடங்குகளில் முடங்கி உள்ளன.

ஏற்கனவே பல்வேறு பிரச்சினைகள் காரணமாக சிவகாசியில் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இங்கு இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பட்டாசுகள் அங்கு விற்பனை செய்யப்படாமல் இருப்பதால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் உற்பத்தியாளர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராஜஸ்தான், ஒடிசா, மேற்குவங்கம், சிக்கிம் ஆகிய மாநில முதல்-மந்திரிகளுக்கு கடிதம் எழுதி பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடைகளை விலக்க கோரி உள்ளார். இந்த கோரிக்கையின் பலனாக தற்போது உள்ள தடை விலக்கப்பட்டால்தான் இங்குள்ள பட்டாசு வியாபாரிகள் நிம்மதி அடைவார்கள்.

இதுகுறித்து பட்டாசு உற்பத்தியாளர் இளங்கோவன் கூறியதாவது:-

இந்தியாவில் மிக முக்கிய பட்டாசு சந்தையான சில வட மாநிலங்களில் பட்டாசு வெடிக்கவும், விற்பனை செய்யவும் தற்போது அந்தந்த மாநில அரசுகள் தடை விதித்து இருப்பதால் ரூ.500 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இங்குள்ள உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த ஆண்டு இந்தியா முழுவதும் பட்டாசு வெடிக்க எந்த தடையும் இருக்க கூடாது. ஆண்டுக்கு ஒரு நாள் வரும் தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதித்தால் கலாசாரம் அழிந்து போகும். இந்த தொழிலை நம்பி உள்ள 8 லட்சம் தொழிலாளர்கள் பட்டாசுக்கு விதித்துள்ள இந்த திடீர் தடையால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

வங்கிக்கடன் வாங்கி பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்ட உற்பத்தியாளர்களுக்கு கரை சேருவோமா? என்ற அச்சம் எழுந்துள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் பட்டாசுக்கு விதித்த தடைகளை விலக்கி கொள்ள வேண்டும்.

ஆண்டு முழுவதும் உழைத்த உற்பத்தியாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்க பட்டாசுக்கு விதிக்கப்பட்ட தடை விலக வேண்டும். தமிழகத்தில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடும் விலக்கி கொள்ள வேண்டும். நேர கட்டுப்பாட்டால் குறைந்த நேரத்தில் அனைத்து மக்களும் ஒரே நேரத்தில் பட்டாசுகளை வெடிப்பதால் புகை மாசு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதை தவிர்க்க, மக்கள் விரும்பும்போது பட்டாசுகளை வெடிக்க முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story