தமிழக கடலோர மாவட்டங்களில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை


தமிழக கடலோர மாவட்டங்களில் மழையின் தீவிரம் படிப்படியாக அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
x
தினத்தந்தி 24 Nov 2020 3:31 AM GMT (Updated: 24 Nov 2020 3:31 AM GMT)

சென்னைக்கு அருகே 470 கி.மீ. தொலைவில் ‘நிவர்’ புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலம் தற்போது தீவிர புயலாக மாறியது. ‘நிவர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல், வலுப்பெற்று நாளை பிற்பகல் மாமல்லபுரம், காரைக்கால் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயல் தற்போது சென்னைக்கு அருகே 470 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, கடலூர், நாகை, புதுச்சேரி, பாம்பன், காரைக்கால், தூத்துக்குடி, ராமேஸ்வரம், குளைச்சல் உள்ளிட்ட 11 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

இன்று கடலோர மாவட்டங்களில் காற்று மணிக்கு 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், 25 ஆம் தேதி(நாளை) புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் தமிழக ஆந்திர கடற்கரை பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீச இருப்பதால், பழவேற்காடு முதல் கோடிக்கரை வரையிலான வட கடலோர மாவட்டங்கள் மற்றும் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரையிலான தென் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Next Story